இந்தியாவில் இந்த ஆண்டு அமோக விளைச்சல், அபரிதமான அரசு கொள்முதல்: மத்தியஅரசு பெருமிதம்.!
இந்தியாவில் இந்த ஆண்டு அமோக விளைச்சல், அபரிதமான அரசு கொள்முதல்: மத்தியஅரசு பெருமிதம்.!
நடப்பு காரீப் பருவத்தில், இதுவரை இல்லாத அளவாக பாசி பயறு, உளுந்து, நிலக்கடலை மற்றும் சோயாபீன் கொள்முதல் 72.48 சதவீதம் அதிகம் என்றும், சென்ற ஆண்டைவிட கூடுதலாக 21.27 சதவீதம் நெல் கொள்முதலும் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இந்தாண்டு காரீப் பருவத்தில், தமிழகம், பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், தெலங்கானா, உத்தரகாண்ட், சண்டிகர், ஜம்மு காஷ்மீர், கேரளா, குஜராத் மற்றும் ஆந்திரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நெல் கொள்முதல் சுமூகமாக நடை பெற்று வருகிறது.
கடந்த நவம்பர் 14ம் தேதி வரை 279.56 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு இதே கால காரீப் பருவ நெல் கொள்முதலைவிட 21.27 சதவீதம் அதிகம்.
நாடு முழுவதும் விவசாயிகளிடம் குறைந்தபட்ச கொள்முதல் விலையில், நேரடி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கொள்முதலுக்காக 24.02 லட்சம் விவசாயிகளுக்கு, ஏற்கனவே ரூ.52,781.42 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மாநிலங்களின் வேண்டுகோள் அடிப்படையில் 45.10 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள், ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஆந்திர பிரதேசம், கர்நாடகா, தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து 1.23 லட்சம் மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 14ம் தேதி வரை, 58 இலட்சத்து 602.68 மெட்ரிக் டன் பாசி பயறு, உளுந்து, நிலக்கடலை மற்றும் சோயாபீன் ஆகியவற்றை அரசு கொள்முதல் செய்துள்ளது. இது கடந்தாண்டு இதே காலத்தில் கொள்முதல் செய்யபட்டதைவிட 72.48% அதிகம்.
இதற்காக தமிழகம், மகாராஷ்டிரா, குஜராத், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த 33,959 விவசாயிகள் ரூ.315.63 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலை பெற்றுள்ளனர்.