7 உணவு பதப்படுத்தும் திட்டங்கள்.. பிரதமரின் கிஷான் சம்பதா திட்டத்தின் கீழ் மத்திய அரசு அனுமதி.!
7 உணவு பதப்படுத்தும் திட்டங்கள்.. பிரதமரின் கிஷான் சம்பதா திட்டத்தின் கீழ் மத்திய அரசு அனுமதி.!
வேளாண் தொழில் மற்றும் சார்ந்த தொழில்களில் ஈடுபடும் நபர்களுக்கு வருமானத்தை இரட்டிப்பாக்க மதிய அரசு பல திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இதற்காக வேளாண் பொருட்களை பதப்படுத்தும் தொழிலை மேம்படுத்த அரசு அதிக அக்கறையை செலுத்தி வருகிறது.
இந்நிலையில், மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் தலைமையில் காணொலி காட்சி மூலம் அமைச்சகங்களுக்கு இடையேயான ஒப்புதல் குழு கூட்டம் நடந்தது. இதில் பிரதமரின் கிஷான் சம்பதா திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் வேளாண் பொருட்கள் பதப்படுத்துதல் கட்டமைப்பு உருவாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபடுபவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் 7 உணவு பதப்படுத்தும் திட்டங்களுக்கு ஐஎம்ஏசி ஒப்புதல் அளித்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.234.68 கோடியாகும். இதில் ரூ.60.87 கோடி அளவுக்கு மானியம் அளிக்கப்படவுள்ளது. மேகாலயா, குஜராத், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இத்திட்டங்கள் தொடங்கப்படுகின்றன. இவற்றின் மூலம் 7750 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.