நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளுக்கு முற்றுப்புள்ளி - ஜிபிஎஸ் மூலம் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு திட்டம்!

Update: 2022-08-07 05:28 GMT

நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளை அகற்றிவிட்டு, ஜிபிஎஸ் மூலம் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு பயணிக்கும் தொலைவுக்கு ஏற்ப சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. 

பாஸ்டேக் முறையில் முழு பலன் கிடைக்காத நிலையில், அதையும் சரி செய்ய மத்திய தரைவழிப் போக்குவரத்து துறை அமைச்சகம் நீண்ட காலமாக ஆய்வுசெய்து வந்தது. இதன் பலனாக செயற்கைக்கோள் மூலம் வாகனங்களுக்கான சுங்க கட்டணம் வசூல் செய்ய தற்போது திட்டமிட்டுள்ளது.

இந்த முறையால், பாஸ்டேக் மற்றும் சுங்கச் சாவடிகளுக்கான தேவையும் இல்லாமல் போகும். எனவே, நாடு முழுவதிலும் உள்ள சுங்கச் சாவடிகளை அகற்றிவிட்டு ஜிபிஎஸ் திட்டத்தை அமல்படுத்த மத்திய தரைவழிப் போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.

முக்கியமாக வாகனங்கள் செல்லும் சாலைகளின் தூரத்தை பொறுத்து சுங்கக் கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளது. இதனால், வாகன உரிமையாளர்கள் ஒரு சுங்கச் சாவடியில் இருந்து அடுத்த சுங்கச் சாவடி வரை செல்லாமல் நடுவழியிலேயே இலக்கை அடைந்தால், அவர்கள் சென்ற தூரத்துக்கு ஏற்ப கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளது. இதனால் வாகனங்களில் செல்வோருக்கு கட்டணமும் குறையும்.

இந்த ஜிபிஎஸ் முறைக்கு ஏற்றபடியே தற்போது நாட்டின் அனைத்து வாகனங்களுக்கும் அதன் 'நம்பர் பிளேட்' மின்னணு தொழில்நுட்பத்துடன் மாற்றப்பட உள்ளது. இந்த பணி முடிந்தால்தான், ஜிபிஎஸ் முறையில் சுங்க கட்டண வசூல் சாத்தியமாகும்.

நாடு முழுவதும் சராசரியாக 67 சதவிகிதம் பேர் மட்டும் பாஸ்டேக்கில் கட்டணம் செலுத்துகின்றனர். இதில், அன்றாடம் சுமார் ரூ.120 கோடி வசூல் செய்யப்படுகிறது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மாநிலங்களவையில் தெரிவித்தார். பாஸ்டேக் இல்லாமல் ரொக்கமாக நடக்கும் வசூல் அதை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Input From: Hindu 


Similar News