சீன தூதரகத்திடம் இருந்து ரூ.1.35 கோடி பெற்றது ராஜீவ் காந்தி ஃபவுண்டேஷன் - உடைத்து சொல்லும் அமித் ஷா!
சீன தூதரகத்திடம் இருந்து ராஜீவ் காந்தி ஃபவுண்டேஷன் ரூ.1.35 கோடி பெற்றதாகவும், இது குறித்த கேள்விகள் எழுவதை தவிர்க்கவே காங்கிரஸ் கட்சி இந்திய - சீன எல்லையில் நிகழ்ந்த மோதல் குறித்து நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுவதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 2005-2007 காலகட்டத்தில் சீன தூதரகத்திடம் இருந்து ராஜீவ் காந்தி ஃபவுண்டேஷன் ரூ.1.35 கோடியை பெற்றுள்ளது. அந்நிய நாடுகளிடம் இருந்து நிதி உதவி பெறுவதற்கான கட்டுப்பாட்டு சட்டத்தை மீறி இந்த நிதி உதவி பெறப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே ராஜீவ் காந்தி ஃபவுண்டேஷனுக்கான உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்தது.
இஸ்லாமிய ஆராய்ச்சி ஃபவுண்டேஷன் தலைவர் ஜாகிர் நாயக்கிடம் இருந்தும் காங்கிரஸ் கட்சி ரூ.50 லட்சம் பெற்றுள்ளது. ராஜீவ் காந்தி ஃபவுண்டேஷனின் தலைவர்களாக உள்ள காங்கிரஸ் தலைவர்களிடம் நான் கேட்க விரும்புவது, ஜாகிர் நாயக் உங்களுக்கு எதற்காக ரூ.50 லட்சம் கொடுத்தார்?
காங்கிரஸ் கட்சியினருக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். மத்தியில் இருப்பது பாஜக அரசு. பிரதமராக இருப்பவர் நரேந்திர மோடி. இந்த ஆட்சி இருக்கும் வரை நமது நாட்டின் ஒரு அங்குலம் நிலத்தையும் எவரும் அபகரிக்க நாங்கள் விட்டுவிட மாட்டோம் எனக்கூறினார்.
Input From: hindu