பேம் இந்தியா திட்டத்தின் கீழ் 7,45,713 மின்சார வாகனங்களுக்கு ரூ.3200 கோடி ஊக்கத்தொகை!
இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு மாறுதல் மற்றும் உற்பத்தி என்ற ஃபேம் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக 7 லட்சத்து 45 ஆயிரத்து 713 வாகனங்களுக்கு ஆதரவளிக்கப்பட்டு இருக்கிறது.
இதற்காக தேவைக்கான ஊக்கத்தொகையான ரூ.3200 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், 26 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 65 நகரங்களில் 6 ஆயிரத்து 315 மின்சார பேருந்துகளுக்கு மத்திய கனரகத் தொழில் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரூ. 10,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் கூடிய மின்சார போக்குவரத்தை ஊக்குவிப்பதை குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
இதன்படி 7090 மின்சார பேருந்துகளுக்கும், 5 லட்சம் மின்சார 3 சக்கர வாகனங்களுக்கும், 55 ஆயிரம் மின்சார கார்களுக்கும், 10 லட்சம் மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கும், ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இந்த வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த தொகை அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
ஃபேம் திட்டத்தை அமல்படுத்துவதில் உள்ள சவால்களை தீர்க்க ஏதுவாக, பின்வரும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.
மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் மேம்படுத்தப்பட்ட ரசாயன செல் எனப்படும் பேட்டரி உற்பத்திக்காக உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்கத்தொகைத் திட்டத்திற்கு கடந்த 2021 மே 12ம் தேதி மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் மின்சார வாகனங்களின் விலையும் குறைந்து வருகிறது.
மின்சார வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது.