காசி விஸ்வநாதர் கோயிலில் இளையராஜாவின் பக்தி இசை: சிவபெருமானே அழைத்ததாக உணர்ச்சிவசப்பட்டு பெருமிதம்!
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் பழமை வாய்ந்த காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க அங்கு காசி தமிழ்ச் சங்கமம் விழா நடக்கிறது.
காசி விஸ்வநாதர் கோயில் அறக்கட்டளையின் நான்கு நிர்வாக உறுப்பினர்களில் ஒருவராக தமிழர் வெங்கட்ரமண கனபாடி தேர்வு செய்யப்பட்டார்.
காசி விஸ்வநாதர் கோயிலில் இளையராஜா இசைக்க வேண்டும் என அதன் அறக்கட்டளை நிர்வாகம் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினர். இதையடுத்து காசி விஸ்வநாதர் கோயிலில் பக்தி இசை நிகழ்ச்சி நடத்த இளையராஜாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதை உடனடியாக ஏற்றுக்கொண்ட இளையராஜா, டிசம்பர் 15-ல் பக்தி இசைக் கச்சேரி நடத்த உள்ளார்.
கோயில் வளாகத்தில் இதுவரை நடைபெறாத இசை நிகழ்ச்சியை நடத்தும் முதல் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இதை அந்த சிவபெருமானே அருளியது போல் உணர்கிறேன். எனது இசையை கேட்க சிவபெருமான் என்னை அழைப்பது போல் உணர்கிறேன்.
காசி மக்களும் எனது இசையை கேட்க உள்ளார்கள் என்பது என்னுள் பரவசத்தை ஏற்படுத்துகிறது. இந்த நிகழ்ச்சியில் நானே இசையமைத்த பக்திப் பாடல்கள் மற்றும் திரைப்படங்களில் வந்த பக்திப் பாடல்களை பாடுவேன் என அவர் கூறினார்.
இதற்காக கோயில் நிர்வாகத்திடம் இளையராஜா எந்தக் கட்டணமும் பெறவில்லை. வழக்கம்போல் கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் இசையை ரசிக்கலாம் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
Input From: Hindu