கொரோனா பணிகளுக்கு விமானப்படை தயார்: விமானப்படை தலைமை தளபதி தகவல்.!
ஆக்சிஜன் டேங்கர்களை வேகமாக எடுத்து செல்லும் வகையில் விமானப்படை தயாராக இருக்க வேண்டும் எனவும் பிரதமர், விமானப்படை தளபதியிடம் கூறியுள்ளார்.
கொரோனா நிவாரண பணிகளுக்கு உதவ இந்திய விமானப்படை தயாராக உள்ளதாக பிரதமர் மோடியிடம் விமானப்படை தலைமை தளபதி பதூரியா கூறியுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிக தீவிரம் அடைந்துள்ளது. தினந்தோறும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் முதல் அலையைவிட இரண்டாவது அலையில் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதனிடையே வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக மத்திய அரசு பல்வேறு வகையில் தடுத்து வருகிறது. நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜனை கொண்டு சேர்ப்பது மற்றும் தடுப்பூசி பணிகளை விரிவுப்படுத்தும் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது.
இந்நிலையில், பிரதமர் மோடியை இந்திய விமானப்படையின் தலைமை தளபதி ஆர்.கே.எஸ்.பதூரியா சந்தித்து பேசியுள்ளார். அவரது சந்திப்பு குறித்து பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது. கொரோனா நிவாரண பணிகளில் விமானப்படையின் பங்களிப்பு பற்றி பிரதமர் மோடியுடன் விமானப்படை தலைமை தளபதி ஆலோசனை நடத்தினார்.
அப்போது அனைத்து வகையான நிவாரண பணிகளுக்காக விமானப்படை தயாராக இருப்பதாக பிரதமரிடம் விமானப்படை தலைமை தளபதி கூறியுள்ளார். நாடு முழுவதும் உள்ள அனைத்து இடங்களுக்கும் சென்றடையும் வகையில் பெரியது மற்றும் சிறிய வகையிலான விமானங்கள் பயன்படுத்தப்படும் என கூறியுள்ளார்.
மேலும், ஆக்சிஜன் டேங்கர்களை வேகமாக எடுத்து செல்லும் வகையில் விமானப்படை தயாராக இருக்க வேண்டும் எனவும் பிரதமர், விமானப்படை தளபதியிடம் கூறியுள்ளார். எனவே வரும் காலங்களில் தடுப்பு மருந்து மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களை விரைவாக எடுத்தும் செல்லும் பணிகளில் தொடர்ந்து இந்தியா விமானப்படை ஈடுபடும் என கூறப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை சமாளிப்பதற்கு முப்படைகளும் களத்தில் இறங்கும் என தெரிகிறது.