மும்பை தாக்குதல்.. பாகிஸ்தான் வெளியிட்ட பட்டியலில் குற்றவாளிகளின் பெயர் இல்லை.. இந்தியா குற்றச்சாட்டு.!

மும்பை தாக்குதல்.. பாகிஸ்தான் வெளியிட்ட பட்டியலில் குற்றவாளிகளின் பெயர் இல்லை.. இந்தியா குற்றச்சாட்டு.!

Update: 2020-11-13 09:07 GMT

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில், 2008ம் ஆண்டு, நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், 150க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 300க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட 10 பயங்கரவாதிகளில், 9 பேர் கொல்லப்பட்டனர். பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப், பின்னர் தூக்கிலிடப்பட்டான்.

இந்த தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள், பாகிஸ்தான் சுதந்திரமாக சுற்றி வருவதாக, இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், இதை பாகிஸ்தான் மறுத்து வந்தது. இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட, ஜமாத் உத் தவா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத்தை மட்டும், சர்வதேச நெருக்கடிக்கு பயந்து, பாகிஸ்தான் அரசு கைது செய்தது.

இவரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில், ஐ.நா., சபை சேர்த்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானில் தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலை, அந்நாட்டின் விசாரணை அமைப்பான, எப்.ஐ.ஏ., தெரிவித்துள்ளது. எப்.ஐ.ஏ., வெளியிட்டுள்ள, 1,210 பயங்கரவாதிகள் பட்டியலில், மும்பை தாக்குதலில் தொடர்புடைய, 11 பயங்கரவாதிகள் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

இவர்கள், மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு, நிதி, பொருள், சாதனங்கள் கொடுத்து உதவி செய்துள்ளதுடன், தாக்குதல் நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக, அந்தப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தப் பட்டியலில், ஹபீஸ் சயீத், ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் ஆகியோரின் பெயர்கள் இடம் பெறவில்லை. இதற்கு இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா, பாகிஸ்தானை சேர்ந்த பலருக்கு மும்பை தாக்குதலில் தொடர்புள்ளதாகக் கூறினார். மேலும், இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களின் பெயர்களை, பாகிஸ்தான் வெளியிடவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Similar News