எதிரிகளை அலறவிடும்! முதல் உள்நாட்டு விமானம் தாங்கி போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த்!
முதல் உள்நாட்டு விமானம் தாங்கி போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
உலக அரங்கில் உள்நாட்டு தொழில்நுட்பத்தின் மூலம் மிகப்பெரிய விமானம் தாங்கிய போர்க்கப்பலை உருவாக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. ஐஎன்எஸ் விக்ராந்த் இன்று நாடு முழுவதும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா தன்னிறைவு பெற்றதன் தனித்துவமான பிரதிபலிப்புதான் ஐஎன்எஸ் விக்ராந்த். விமான தளத்தில் பொருத்தப்பட்டுள்ள எஃகு டிஆர்டிஓ விஞ்ஞானிகள் மூலம் இந்திய நிறுவனங்களால் உருவாக்கப்பட்டது.
ஐஎன்எஸ் விக்ராந்த்தை பார்க்கும் போது ஒரு நகரமே மிதந்து செல்வது போல் உள்ளது. அதன் மூலம் ஏற்படும் மின்சக்தியினால் 5000 வீடுகளுக்கு மின் வசதியை ஏற்படுத்த முடியும். அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மின்வயர்களின் நீளம் கொச்சி முதல் காசி வரை நீண்டு செல்லும் அளவில் உள்ளது.
விக்ராந்த் நமது கடல்சார் பகுதிகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபடும் போது பல பெண் வீரர்கள் பணியமர்த்தப்படுவார்கள். கடலின் மகத்தான சக்தியுடன், எல்லையற்ற பெண் சக்தியும் இணைந்து செயலாற்றும் போது, புத்தம் புதிய இந்தியாவின் சிறந்த அடையாளமாக அமையும் என பிரதமர் கூறினார்.
ராணுவத் துறையில் தற்சார்பை நோக்கிய குறிப்பிடத்தக்க முயற்சியாக ஐ.என்.எஸ். விக்ராந்த் என்ற முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பலாகும். இந்திய கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு அலுவலகத்தால் வடிவமைக்கப்பட்டு, மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர் வழிகள் அமைச்சகத்தின் கீழ் பொதுத்துறை நிறுவனமாக இயங்கும் கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்ட விக்ராந்த், நவீன ரக தானியங்கி அம்சங்களுடன், இந்திய கடல்சார் வரலாற்றில் பிரம்மாண்டமான போர்க்கப்பலாக உருவாக்கப்பட்டுள்ளது.