பழங்குடியின சமூகத்தின் முக்கியத்துவம் விழா - பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!
ஆதி மகோத்சவ் எனும் தேசிய பழங்குடியினர் விழாவை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
ஆதி மகோத்சவ் எனும் தேசிய பழங்குடியினர் விழாவை பிப்ரவரி 16 அன்று புதுதில்லி தியான்சந்த் தேசிய விளையாட்டு அரங்கில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைக்க உள்ளார். இந்தத் தகவலை மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, புதுதில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். இந்த விழாவின்போது, பல்வேறு அரங்கங்களைக் கொண்ட கண்காட்சிகள் நடைபெறவுள்ளது எனவும், இதில் பழங்குடியின சமூகங்களைச் சேர்ந்த கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்கள் உருவாக்கிய பொருட்கள் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்தார். பிரதமர் திரு நரேந்திர மோடி இதனைப் பார்வையிட உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
இயற்கை முறையிலான உற்பத்தியின் அவசியத்தை வலியுறுத்திய அவர், இதில் பழங்குடியின சமூகங்கள் முக்கியப் பங்காற்ற முடியும் என்றும் கூறினார். இந்த ஆதி மகோத்சவ், பழங்குடியினரின் உற்பத்திப் பொருட்களை தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு கொண்டுசெல்லும் முக்கியத் தளமாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார். பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பான ட்ரைஃபெட், இந்த ஆண்டு ஆதி மகோத்சவை, "பழங்குடியினக் கைவினைப் பொருட்கள், கலாச்சாரம், உணவு மற்றும் வணிகத்தின் கொண்டாட்டம்" என்ற கருப்பொருளில் நடத்துகிறது.
இது பழங்குடியினரின் வாழ்க்கை நெறிமுறைகளை பிரதிபலிப்பதாக அமையும். 200-க்கும் மேற்பட்ட அரங்குகளில் பழங்குடியினரின் கைவினைப் பொருட்கள், கைத்தறிப் பொருட்கள், ஓவியங்கள், ஆபரணங்கள், மண்பாண்டப் பொருட்கள், உணவு வகைகள் உள்ளிட்ட பல வகையான பொருட்கள் காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்படும். 28 மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்கள் இந்த விழாவில் பங்கேற்கின்றனர். சிறுதானியங்கள் பழங்குடியினரின் முக்கிய உணவாக உள்ள நிலையில், இந்த ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாகவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
Input & Image courtesy: News