குருத்வாராவில் திடீரென்று வழிபாடு நடத்திய பிரதமர் மோடி.!
குருத்வாராவில் திடீரென்று வழிபாடு நடத்திய பிரதமர் மோடி.!
டெல்லியில் உள்ள குருத்வாராவில் பிரதமர் மோடி திடீரென்று சென்று வழிபாடு நடத்திய சம்பவம் பஞ்சாப் விவசாயிகளிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இன்று காலை, ரகப் கஞ்ச் சாகிப் குருத்வாராவுக்கு பிரதமர் மோடி வருகை தந்தது டெல்லி மக்களை வியப்பில் ஆழ்த்தியது. குரு தேஜ் பகதூர் சீக்கிய மதத்தின் ஒன்பதாவது குருவாக இருந்தார். அவரது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
பிரதமர் மோடி ஆரஞ்சுத் துணியால் தலையை மறைத்து பிரகாசமான மஞ்சள் குர்தாவுடன் இடுப்பு கோட் அணிந்து சீக்கிய முறைப்படி குரு தேஜ் பகதூரை வழிபட்டார். பின்னர் சீக்கிய மதகுருக்கள் அளித்த மரியாதையை ஏற்றுக்கொண்டார். குருத்வாராவிலிருந்து வெளியே வந்தபோது சீக்கிய பக்தர்கள் பிரதமருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
இதற்காக காவல்துறை பாதுகாப்பு அல்லது போக்குவரத்து தடைகள் ஏற்படுத்தி டெல்லி மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவில்லை என்று அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
இது பற்றி பிரதமர் மோடி ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: இன்று காலை வரலாற்றுச் சிறப்புமிக்க குருத்வாரா ரகப் கஞ்ச் சாகிப்பிற்குச் சென்று பிரார்த்தனை செய்தேன்.
அங்கு தான் ஸ்ரீ குரு தேஜ் பகதூர் ஜியின் புனித உடல் தகனம் செய்யப்பட்டது. நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டேன். உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கானவர்களைப் போலவே, நானும் ஸ்ரீ குரு தேஜ் பகதூர் ஜியின் தயவால் ஆழமாக ஈர்க்கப்பட்டேன்.
ஸ்ரீ குரு தேஜ் பகதூர் ஜியின் 400வது பிரகாஷ் பர்வின் சிறப்பு நிகழ்வை நமது அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் கொண்டாடக் கிடைத்துள்ள வாய்ப்பு அவரது சிறப்புமிக்க கருணையே ஆகும். நமக்கு இந்த ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் வரலாற்றுரீதியான சந்தர்ப்பத்தில் ஸ்ரீ குரு தேஜ் பகதூர் ஜியின் கொள்கைகளைக் அனைவரும் கொண்டாடுவோம் என பதிவிட்டுள்ளார்.
மேலும், நாட்டில் உள்ள அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவும் சென்றார் என பாஜகவினர் கருத்து கூறி வருகின்றனர். விரைவில் வேளாண்மை சட்டத்தை விவசாயிகள் புரிந்து கொண்டு வீட்டிற்கு செல்வார்கள் என எதிர்பார்க்கலாம்.