கொரோனாவால் ராஜஸ்தான் பாஜக மூத்த தலைவர் மற்றும் எம்எல்ஏ கிரண் மகேஸ்வரி மரணம்: பிரதமர் மோடி இரங்கல்.!
கொரோனாவால் ராஜஸ்தான் பாஜக மூத்த தலைவர் மற்றும் எம்எல்ஏ கிரண் மகேஸ்வரி மரணம்: பிரதமர் மோடி இரங்கல்.!
கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த ராஜஸ்தான் மாநில பாஜக மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான கிரண் மகேஸ்வரி, வயது 59, சிகிச்சை பலன் அளிக்காமல் மருத்துவமனையில் நேற்று இரவு காலமானார். அவர் குர்கோவனில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் கடந்த சில நாட்களாகச் சிகிச்சையில் இருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலன் அளி்க்காமல் நேற்று நள்ளிரவு காலமானார்.
ராஜஸ்தானில் உள்ள ராஜ்சமந்த் தொகுதியில் தொடர்ந்து 3 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தவர் கிரண் மகேஸ்வரி. சிறந்த சமூக சேவகியாகவும், தன்னலமற்ற முறையில் இவர் சேவை செய்து வந்ததாகவும் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மாநில சட்டப்பேரவை சபாநாயகர் சிபி ஜோஷி, பாஜக மாநிலத் தலைவர் சதீஷ் பூனியா உட்பட ஏராளமான தலைவர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி அவர்களும் தனது இரங்கல் செய்தியில் " “ கிரண் மகேஸ்வரி மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைகிறேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும், ஏழை மக்கள் முன்னேற்றத்துக்கும் ஏராளமானப் பணிகளை அவர் செய்துள்ளார். மகேஸ்வரியின் குடும்பத்தாருக்கு எனது இரங்கல்கள். ஓம் சாந்தி” எனத் தெரிவித்துள்ளார்.
கிரண் மகேஸ்வரி சென்ற பாஜக ஆட்சியில் ராஜஸ்தானில் கேபினெட் அந்தஸ்தில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தார். மேலும், பாஜகவில் தேசிய பொதுச்செயலாளர், தேசியத் துணைத்தலைவர், பாஜக மகளிர் அணியின் தலைவராகவும் இருந்துள்ளார்.