வாடகையே கட்டாமல் டிமிக்கி கொடுத்த சோனியா காந்தி, காங்கிரஸ் அலுவலகம் - வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்!
Rent of Congress Headquarters, Sonia Gandhi's Janpath Road Residence Pending, Reveals RTI Reply
டெல்லியில் உள்ள காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியின் அதிகாரப்பூர்வ இல்லம் உட்பட காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ஆக்கிரமித்துள்ள பல்வேறு சொத்துகளின் வாடகை இன்னும் செலுத்தப்படவில்லை என, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அளித்த பதிலில் தெரியவந்துள்ளது.
பாஜக தலைவர் அமித் மாளவியா ட்விட்டரில் பகிர்ந்துள்ள விவரங்களின்படி, ஆர்டிஐ ஆர்வலர் சுஜித் படேல் தகவல் வேண்டி மனு தாக்கல் செய்தார். அக்பர் சாலையில் அமைந்துள்ள கட்சி தலைமையகத்திற்கான வாடகைத் தொகை ரூ. 12,69,902 இன்னும் செலுத்தப்படவில்லை என்று அமைச்சகத்தின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்டிஐ பதில் நகலைப் பகிர்ந்த மாளவியா, "ஒன்றரை ஆண்டுகளாக சோனியா தனது சொந்த வீட்டு வாடகையை செலுத்தவில்லை" என்று சோனியா காந்தியை சரமாரியாக தாக்கினார்.
ஜன்பத் சாலையில் அமைந்துள்ள சோனியா காந்தியின் இல்லத்துக்கு இன்னும் ரூ.4,610 வாடகையை காங்கிரஸ் செலுத்தவில்லை என்று ஆர்டிஐ பதில் கூறியுள்ளது. கடைசியாக செப்டம்பர் 2020 இல் வாடகை செலுத்தப்பட்டது.
டெல்லி சாணக்யபுரி பகுதியில் சோனியா காந்தியின் தனிச் செயலாளராக உள்ள வின்சென்ட் ஜார்ஜ் குடியிருக்கும் பங்களாவின் வாடகை ரூ.5,07,911 நிலுவையில் உள்ளது. கடைசியாக கடந்த 2013 ஆகஸ்ட் மாதம் வாடகை செலுத்தப்பட்டது.