திமுக - காங்கிரசை விட தமிழகத்துக்கு அதிகம் செய்தவர்கள் நாங்கள்தான்: அமித்ஷா பேச்சு முழு விவரம்.!
திமுக - காங்கிரசை விட தமிழகத்துக்கு அதிகம் செய்தவர்கள் நாங்கள்தான்: அமித்ஷா பேச்சு முழு விவரம்.!
தமிழகம் நேற்று வந்த அமித்ஷாவுக்கு விமான நிலையத்தில் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதேபோல பாஜகவினர் மற்றும் அதிமுகவினரும் வரவேற்பளித்தனர். அதன் பிறகு மாலை 4.40 மணிக்கு கலைவாணர் அரங்கம் சென்ற அமித்ஷா தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
ரூ.380 கோடி மதிப்பிலான சென்னைக்கு குடிநீர் வழங்கும் தேர்வாய்கண்டி நீர்தேக்க திட்டம் ரூ. 61,843 கோடி மதிப்பிலானசென்னை மெட்ரோ 2 ம் கட்ட திட்டம் உட்பட எட்டு திட்டங்களை தொடக்கி வைத்தார்.
அதன்பிறகு துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விழாவுரை ஆற்றினர். அதில் மாநில அரசின் பல்வேறு சாதனைகளை கூறிய அவர்கள், மத்திய அரசுக்கு பல கோரிக்கைகளை முன் வைத்தனர். அதன்பின் அதிமுக - பாஜக கூட்டணி இனிமேலும் தொடரும் என்றனர்.
அதன் பிறகு உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில்:
இந்தியாவிலேயே தமிழகம் கொரோனாவில் இருந்து அதிகம் மீண்டு வருவோரின் எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அது மட்டுமல்லாமல் நீர்மேலாண்மை திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் நாட்டிலேயே மிக சிறப்பாக செயல்படுகிறது.
ஏழைகளுக்கான பல திட்டங்களை மோடி அரசு தீட்டி மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அனைவருக்குமான வங்கிக் கணக்கு திட்டம் தொடங்கப்பட்டது முதல் இலவச எல்பிஜி சிலிண்டர்கள் வழங்குவது உட்பட எந்த இடைத்தரகர்களும் இல்லாமல் அரசு நேரடியாக மக்களுக்கு உதவி வருகிறது. நாடு முழுவதும் 13 கோடி வீடுகளுக்கு எரிவாயு கொண்டு சேர்த்துள்ளது இந்த அரசு.
விவசாயிகளுக்கு ஆதரவு தொகையாக அவர்களுக்கு வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ.95 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. அனைவருக்கும் வீடு என்கிற திட்டம் வருகின்ற 2022ம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும்.