சுதந்திர தின உரையில் 5ஜி செல்போன் சேவையை பற்றி பிரதமர் மோடி கூறிய தகவல் என்ன?

சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி செல்போன் சேவை பற்றி சில தகவல்களை வெளியிட்டார் விரைவில் செல்போன் சேவை நாட்டில் தொடங்கப்படும் என்று கூறினார்.

Update: 2022-08-16 06:00 GMT

நாட்டில் விரைவில் 5ஜி செல்போன் சேவை தொடங்கும் என்று பிரதமர் மோடி கூறினார்.

டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி பேசினார். அவர் பேசியதாவது தேசிய கொடி என்ற பிரசாரத்துக்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இது நாட்டுக்கு புதிய வலிமையை அளித்துள்ளது.

இப்படி ஒரு வலிமை இருப்பது ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை யாருக்கும் தெரியாது.இந்த வலிமையை சமூக அறிவியல் நிபுணர்கள் கூட கற்பனை செய்திருக்க மாட்டார்கள்.

சுதந்திர தினம் என்பது சுதந்திரத்துக்காக பாடுபட்ட எண்ணற்ற தலைவர்களுக்கு முன்பு தலைவணங்க எல்லோருக்கும் வாய்ப்பளிக்கும் நாள். மகாத்மா காந்தி,நேரு, பட்டேல், நேதாஜி அம்பேத்கர், வீர சவார்க்கர், சியாமா பிரசாத் முகர்ஜி தீனதயாள் உபாத்தியாயா , ஜெயபிரகாஷ் நாராயணன், சுப்பிரமணிய பாரதி உள்ளிட்ட தலைவர்களும் வேலுநாச்சியார் உள்ளிட்ட பெண்களும் மற்றும் பழங்குடியினரும் விடுதலைக்காக பாடுபட்டனர்.

நாம் தற்போது 5ஜி செல்போன் சேவை என்ற சகாப்தத்தை நோக்கி அடியெடுத்து வைக்கிறோம். இதற்கு நீண்ட காலம் காத்திருக்க தேவையில்லை விரைவில் செல்போன் சேவை தொடங்க போகிறது.

கிராமங்களில் கண்ணாடி இழை கேபிள் போடப்பட்டு வருகிறது.இதன் மூலம் கிராமங்களிலும் டிஜிட்டல் இந்தியா கனவு நனவாகிறது. கிராமங்களில் 4 லட்சம் பொது சேவை மையங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. அவற்றை நடத்தும் 4 லட்சம் தொழில்முனைவோர்கள் மூலமாக கிராம மக்கள் டிஜிட்டல் சேவைகளை பெறப்போகிகிறார்கள்.

டிஜிட்டல் வழியில் கல்வியிலும் முழுமையான புரட்சி வரப்போகிறது. சூரிய சக்தி ஹைட்ரஜன், மின்சார வாகனங்கள் உற்பத்தி என எரிசக்தித் துறையிலும் இந்தியா தற்சார்பு நிலையை அடைந்து வருகிறது.

கடந்த 8 ஆண்டுகளில் ஆதார், நேரடி பண மாற்றுத் திட்டம் செல்போன்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி ரூபாய் 2 லட்சம் கோடி கருப்பு பணம் கண்டறியப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் நடக்கும் டிஜிட்டல் பரிமாற்றங்களில் 40 சதவீத பரிமாற்றங்கள் இந்தியாவில் தான் நடக்கிறது.

லால்பகதூர் சாஸ்திரி, 'ஜெய் ஜவான் ,ஜெய் கிசான்' என்ற முழக்கத்தை எழுப்பினார்.நாம் ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை உணர்த்த 'ஜெய் அனுசந்த ஹன்' என்ற முழக்கத்தை எழுப்புவோம்.

ஒவ்வொருவருக்கும் கடமை இருக்கிறது. அதை செய்தால் திட்டமிட்ட காலத்திற்கு முன்பே விரும்பிய பலன்களை பெறலாம். இவ்வாறு அவர் பேசினார்.





 




Similar News