'அரசியலமைப்பு தினம்' ஏன் இன்று அனுசரிக்கப்படுகிறது?
'அரசியலமைப்பு தினம்' ஏன் இன்று அனுசரிக்கப்படுகிறது?
2015ஆம் ஆண்டு முதல் அரசியலமைப்பு தினம் அல்லது சம்விதன் திவாஸ், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 அன்று கொண்டாடப்படுகிறது. தேசிய சட்ட தினம் என்றும் அழைக்கப்படும் இந்த நாள், நவம்பர் 26, 1949 அன்று அரசியலமைப்பு சபையால் இந்திய அரசியலமைப்பு முதல் முறையாக ஏற்றுக்கொண்டதை நினைவு கூர்கிறது. இந்த அரசியலமைப்பு சட்டம், 1950 ஜனவரி 26ஆம் நாள் நடைமுறைக்கு வந்தது. அதுவே நம் குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது.
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு, குடி மக்களிடையே அரசியலமைப்பு மதிப்புகளை வளர்ப்பதற்காக என்று ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 ஆம் தேதி அரசியலமைப்பு தினமாக அனுசரிக்கப்படும் என்று 2015ல் அறிவித்தது.
2015ஆம் ஆண்டு அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவரான அம்பேத்கரின் 125 ஆவது ஆண்டு நிறைவை ஆண்டு குறித்தது. மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் நவம்பர் 26ஐ அரசியலமைப்பு தினமாக அறிவித்தது. அதற்கு முன்னர், நாட்டின் முதல் சட்ட அமைச்சர் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்தும் நாளாக இது சட்ட தினமாக மட்டுமே அனுசரிக்கப்பட்டு வந்தது.
அரசியலமைப்பு சபை:
அரசியலமைப்புச் சபையின் முதல் அமர்வு அதாவது இந்திய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கு அமைக்கப்பட்ட குழு, டிசம்பர் 9, 1946 அன்று இப்பொழுது பாராளுமன்றத்தின் மத்திய மண்டபம் (அப்போதைய அரசியல் அமைப்பு மண்டபத்தில்) நடைபெற்றது. இதில் ஒன்பது பெண்கள் உட்பட 207 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்தியாவின் முதல் ஜனாதிபதியான டாக்டர் ராஜேந்திர பிரசாத் சட்டமன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த குழு 2 ஆண்டுகள் 11 மாதங்கள் மற்றும் 18 நாட்கள் கூடி அரசியல் அமைப்பை உருவாக்கியது.
சுதந்திர இந்தியாவுக்கான அரசியலமைப்பை உருவாக்க அரசியலமைப்புச் சபை கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளை எடுத்துக் கொண்டது. இந்த காலகட்டத்தில் இந்த சபை 165 நாட்களில் 11 அமர்வுகளை நடத்தியதாக மக்களவை வலைத்தளம் தெரிவிக்கின்றது.