பிஷப் ஹீபர் கல்லூரியில் பேராசிரியர் பாலியல் தொல்லை - கல்லூரியை கையகப்படுத்துமா அரசு?

Update: 2021-06-30 14:48 GMT

திருச்சி பிஷப் ஹீபர் கல்லுாரி தமிழ்த் துறை தலைவர் பால் சந்திரமோகன் மீது முதுகலை படிக்கும் மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி புத்துாரில் பிஷப் ஹீபர் கல்லுாரி இயங்கி வருகிறது. தென்னிந்திய திருச்சபையின் திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் கீழ் இந்த கல்லூரி இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு எம்ஏ தமிழ் படிக்கும் ஐந்து மாணவியர் மார்ச் மாதம் கல்லூரி முதல்வரிடம் அளித்த புகார் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. துறைத் தலைவருக்கு அந்த கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியை ஒருவரும் பாலியல் குற்றத்துக்கு துணை போவதாக அந்த புகார் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவிகள் அளித்த அந்தப் புகார் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: தமிழ் ஆய்வுத் துறையில் 54 வயது மதிக்கத்தக்க பால் சந்திரமோகன் என்பவர் துறைத் தலைவராக இருந்து வருகிறார். இவர் வகுப்பறையில் மாணவிகளிடம் இரட்டை அர்த்த வசனம் பேசுவது போன்ற பாலியல் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் சட்டை மற்றும் பேன்ட்டை தளர்த்தி அவர் செய்த சேட்டைகளை பார்த்து மாணவிகள் தலை குனிந்தபடியே வகுப்பிலிருந்து வெளியே வந்தோம்" என்று அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

அந்த துறைத்தலைவர் மாணவிகளை தன் அறைக்கு வரச்சொல்லி கட்டாய படுத்துவதாகவும், அங்கும் ஆபாசமாக பேசுவது உள்ளிட்ட பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக மாணவிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதே துறையில் பணியாற்றும் உதவி பேராசிரியரான 43 வயது மதிக்கத்தக்க நளினி என்பவர் "'ஹெச்.ஓ.டி.,யை பார்க்க போகும் போது, முகம் கழுவி, மேக்கப் போட்டு தான் போக வேண்டும்' என வலியுறுத்துகிறார். எங்களால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. ஆகையால் கல்லுாரியில் இருந்து வெளியேற விரும்புகிறோம்" என்று அந்த 5 மாணவிகள் தங்கள் புகார் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

இந்த பாலியல் சீண்டலுக்கு எதிராக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளி வராத நிலையில் பாலியல் சீண்டல்கள் ஈடுபட்ட துறைத்தலைவர் பால் சந்திரமோகன் மற்றும் அவருக்கு துணையாக இருந்த நளினி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் பள்ளி கல்லூரிகளை அரசு கையகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்த நிலையில் தற்போது பிஷப் ஹீபர் கல்லூரியை அரசு கையகப்படுத்துமா என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Similar News