சென்னையில் கோவில் நிலங்கள் மீட்பு - ஆக்கிரமிப்பாளர்கள் பின்னணியில் யார்?
சென்னை குரோம்பேட்டை நெமிலிச்சேரி அகஸ்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 2.2 ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நேற்று அதிரடியாக மீட்கப்பட்டது.
சென்னை மாவட்டம் குரோம்பேட்டை அருகே நெமிலிச்சேரியில் ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் பல ஏக்கர் சொத்துக்கள் இருக்கின்றன. பழைய பல்லாவரத்தில் இக்கோவிலுக்கு சொந்தமான 2.2 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த கோவில் நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து வைத்துக்கொண்டு மெக்கானிக் கடை, பழைய இரும்பு குடோன் என 11 கடைகளை கட்டி வாடகைக்கு விட்டிருந்தார்.
இந்தக் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக 2017-ல் இந்து சமய அறநிலையத் துறை சட்டப்பிரிவு 78-ன் கீழ் நடவடிக்கை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு இந்த கோவில் நிலத்தில் இருந்து வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் கோவில் நிலம் மீட்கபடாமல் இருந்து வந்த நிலையில் தற்போது கோவில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்கும் பணி, நேற்று காலை துவங்கியது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர்பாபு "இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிலங்களை யார் ஆக்கிரமிப்பு செய்து இருந்தாலும் அவற்றை அகற்றி சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என்று முதல்வரின் உத்தரவுப்படி 79 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார். மேலும் "கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் தானாக முன்வந்து கோவில் நிலங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
ஒரு பக்கம் ஆக்கிரமிப்புகளில் இருந்து கோவில் சொத்துக்களை மீட்பதாக கூறும் திமுக அரசு, மறுபுறம் பல காலமாக கோவில் சொத்துக்களை ஆக்கிரமித்து வீடு கட்டி இருப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
Source : Dinamalar