அம்மன் கோவில் சிரசு திருட்டு - மர்ம நபர்களுக்கு வலை வீச்சு!

Update: 2021-07-02 03:57 GMT

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே அம்மன் கோவில் திருவிழாவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் கோவிலில் இருந்த அம்மன் சிரசு திருட்டு போயுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே, எம்.வி.குப்பத்தில் கெங்கையம்மன் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் வரும் 16ஆம் தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழா நடத்த கிராம மக்கள் ஏற்பாடு செய்து வந்தனர். ஆனால் இந்த கோவிலை அப்பகுதியை சேர்ந்த இரண்டு பிரிவு மக்களுக்கும் தங்களுக்கு என சொந்தம் கொண்டாடி வருகிறது. எனவே இந்த கோவில் திருவிழாவை தாங்கள் தான் நடத்த வேண்டும் என்று இரு தரப்பினரும் தனித்தனியே காவல்துறையினரிடம் அனுமதி கேட்டிருந்தனர்.

இதனால் கோவில் திருவிழாவின்போது அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் காவல்துறையினர் இருதரப்பிற்கும் அனுமதி வழங்காமல் இருந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கோவிலில் இருந்த கெங்கையம்மன் சிரசை கடந்த 27 ஆம் தேதி அருகிலுள்ள ஆதிபுரீஸ்வரர் கோவிலுக்குள் மக்கள் எடுத்துச் சென்று வைத்துள்ளனர். தற்போது கெங்கையம்மன் சிரசை காணவில்லை என்று அப்பகுதியை சேர்ந்த இரு பிரிவினரும் தனித்தனியே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரிகள் கோவிலுக்கு அருகே உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது இரவு நேரத்தில் கோவிலுக்கு வந்த மர்ம நபர்கள் அம்மன் சிரசை திருடி சென்றது தெரியவந்துள்ளது. இந்த சிசிடிவி கேமராவை பதிவாகியுள்ள மர்ம நபர்களை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இருதரப்பு பிரச்சனையில் அம்மன் சிரசு திருட்டு போயுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source : DINAMALAR 

Similar News