ஆகஸ்ட் 1-7 : உலகத் தாய்ப்பால் வாரம் ஆரோக்கியமான பூமிக்காகத் தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிப்போம்.!
ஆகஸ்ட் 1-7 : உலகத் தாய்ப்பால் வாரம் ஆரோக்கியமான பூமிக்காகத் தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிப்போம்.!
தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும் தாய்ப்பால் குடிப்பதால் குழந்தைக்கும் நல்லது. தாய்ப்பால் ஊட்டுவதால் பூமி எப்படி ஆரோக்கியமாக இருக்கும்? ஆனால் இந்த ஆண்டின் உலகத் தாய்ப்பால் வாரத்தின் மையக்கருத்தே ஆரோக்கியமான பூமிக்காக தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிப்போம் என்பதுதான்.
இதைப் பிறகு விரிவாகப் பார்ப்போம். முதலில் தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் எப்படி இருக்கிறது என்பதைப் புள்ளிவரங்கள் மூலம் புரிந்து கொள்ளுவோம்.
ஒரு சமூகத்தில் தாய்ப்பால் ஊட்டும் பழக்கம் எந்த அளவில் உள்ளது என்பதை சுகாதார நிபுணர்களும் ஆராய்ச்சியாளர்களும் மூன்று காரணிகள் அடைப்படையில் கணிக்கின்றனர்.
1. குழந்தை பிறந்த உடனேயே ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் ஊட்ட ஆரம்பித்தல்
2. குழந்தைக்கு முதல் 6 மாதங்களுக்கு வெறும் தாய்ப்பாலை மட்டுமே உணவாகக் கொடுத்தல்
3. 6 மாதத்துக்குப் பிறகு தாய்ப்பாலுடன் இணை உணவும் கொடுத்தல்
தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு-4 (2015-16)-இல் இந்தக் காரணிகளின் அடிப்படையிலான புள்ளிவிவரங்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. இந்த விவரங்கள் மாவட்ட அளவில்வரை கிடைக்கின்றன.
இந்த கணக்கெடுப்பின்படி இந்தியாவில் குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் ஊட்டும் பழக்கம் 41.5% ஆகவும் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்கும் பழக்கம் 55% ஆகவும் 6 மாதத்துக்குப் பிறகு தாய்ப்பாலுடன் இணை உணவு கொடுத்தல் 42.2% ஆகவும் இருக்கின்றது. தமிழ்நாட்டைப் பொறுத்து இவை முறையே 55.4%, 48.3% மற்றும் 67.5% ஆகவும் இருக்கின்றன. புதுச்சேரியைப் பொறுத்து இவை 64.6%, 47.6% மற்றும் 76.6% ஆக உள்ளன.