கடலூர் : கொரோனா ஊரடங்கால் நாற்றங்கால் தொழில் பாதிப்பு, ஒரு கோடி கன்றுகள் தேக்கம், 1000 தினக்கூலித்தொழிலாளிகள் வேலை இழப்பு.!
கடலூர் : கொரோனா ஊரடங்கால் நாற்றங்கால் தொழில் பாதிப்பு, ஒரு கோடி கன்றுகள் தேக்கம், 1000 தினக்கூலித்தொழிலாளிகள் வேலை இழப்பு.!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி வட்டங்களை சேர்ந்த வேகாகொல்லை, சத்திரம், கோரணப்பட்டு, மதனகோபாலபுரம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள நாற்று உற்பத்தி பண்ணைகள் இந்திய அளவில் புகழ்பெற்றவை.
இரு நூற்றாண்டுகளுக்கு மேல் நாற்று உற்பத்தி தொழில் இங்கு நடந்து வருகிறது இங்குள்ள நாற்றங்கால்களில் உற்பத்தி செய்யப்படும் பூஞ்செடிகள்,பழமர நாற்றுகள், மரக்கன்றுகள் இந்தியா முழுவதும் பூத்து காய்த்து கனிந்து மக்களை மகிழ்வித்து வருகின்றன.
இதற்கு காரணம் இக்கிராமங்களின் செம்மண் வளமும், தண்ணீரின் தன்மையும் என்கின்றனர் நாற்றங்கால் விவசாயிகள். இக்கிராமங்களில் இயங்கும் 200 க்கும் மேற்பட்ட நர்சரி பண்ணைகளில் தற்போது 2 ஆயிரம் தொழிலாளர்கள் நேரிடையாகவும் மறைமுகமாகவும் பணியாற்றி வருகின்றனர்.
இது போல் தமிழ்நாடு முழுவதும் 5 ஆயிரம் தொழிலாளர்கள் இத்தொழிலை நம்பியுள்ளனர். ரோஜா, குண்டுமல்லி, கனகாம்பரம், காக்கட்டான், கோழிகொண்டை உள்ளிட்ட பூஞ்செடிகளும், கொய்யா, சவுக்கை, மா, பலா, வாழை, தேக்கு, பலா, முந்திரி, நெல்லி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட கன்று வகைகள் ஆண்டுக்கு பல கோடி இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன
இவற்றை நாடு முழுவதிலும் உள்ள நாற்றங்கால் பண்ணை வியாபாரிகள் போட்டிப்போட்டுக்கொண்டு வாங்கிச்சென்று விற்பனை செய்கின்றனர். புதுச்சேரி, விழுப்புரம்,. சென்னை, ஓசூர், பெங்களூர், ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் இயங்கும் 500 க்கும் மேற்பட்ட நாற்றங்கால் பண்ணைகள் இவற்றை நம்பியுள்ளன. மலைவேம்பு உள்ளிட்ட அரிய மர வகை கன்றுகள் சில வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன .
கொரோனா வைரஸ் தொற்று ஊரடங்கால் பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டாலும் கடலூர் மாவட்டத்தில் நாற்று உற்பத்தி தொழில் முற்றிலும் முடக்கப்பட்டது. கடந்த மூன்று மாதங்களாக கடுமையாக வியர்வை சிந்தி உற்பத்தி செய்யப்பட்ட சுமார் ஒரு கோடி கன்றுகள் விற்பனை செய்ய முடியாமல் தேங்கி கிடக்கின்றன.