மக்களே இயக்கமாக செயல்பட்டால் மட்டுமே கொரோனாவை ஒழிக்க முடியும் - மரு.இராமதாசு!
மக்களே இயக்கமாக செயல்பட்டால் மட்டுமே கொரோனாவை ஒழிக்க முடியும் - மரு.இராமதாசு!
தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் நோய் பரவி வரும் வேகம் குறித்த புள்ளி விவரங்களைப் பார்க்கும் போது அனைவர் மனதிலும் பதற்றம் பரவுவதை தவிர்க்க முடியாது.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அடுத்து நடக்குமோ என்ற அச்சத்தில் சென்னைவாசிகள் உறைந்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் நேற்றைய நிலவரப்படி 40,498 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் மட்டும் 28,924 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மே மாதம் 31-ஆம் தேதி நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழக அளவில் 22,333 ஆகவும், சென்னையில் 14,802 ஆகவும் இருந்தது.
அதன்பின் கடந்த 12 நாட்களில் மட்டும் தமிழக அளவில் கொரோனா தொற்று 82.23% அதிகரித்திருக்கிறது. சென்னையில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நாள் முதல் மே மாத இறுதி வரை ஏற்பட்ட தொற்றுகளின் எண்ணிக்கை கடந்த 12 நாட்களில் இரட்டிப்பாகி இருக்கிறது.
அதுமட்டுமின்றி கடந்த 10 நாட்களாக சென்னையில் ஒவ்வொரு நாளும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
ஒரு நாள் கூட கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறையவில்லை என்பது ஒருபுறமிருக்க, அது படிப்படியாக அதிகரித்து நேற்று 1500-ஐ நெருங்கியுள்ளது. இது நிச்சயமாக மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தும் விஷயம் என்பதில் ஐயமில்லை.
சென்னையில் கடந்த சில நாட்களாக சோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருக்கிறது; அதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது என்பது ஒருபுறம் இருந்தாலும், அது குறித்து மக்களிடம் விளக்கி மக்களின் நம்பிக்கையை பெற வேண்டியது அவசியம் ஆகும்.
சென்னையில் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தாமல் அவர்களின் ஒத்துழைப்பை பெற முடியாது; ஒத்துழைப்பை பெறாமல் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது என்பதை அதற்கான பொறுப்புகளில் இருப்பவர்கள் உணர வேண்டும். இது தான் சென்னையில் கொரோனா வைரஸ் நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய முதன்மை நடவடிக்கையாகும்.