சமூக ஊடகங்களில் கலக்கும் கோதண்டராமர் - இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் தைவான், ஹாங்காங் மக்கள்.!

சமூக ஊடகங்களில் கலக்கும் கோதண்டராமர் - இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் தைவான், ஹாங்காங் மக்கள்.!

Update: 2020-06-18 09:54 GMT

இந்திய - சீன எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றம் மற்றும் கடந்த செவ்வாய்க் கிழமை இரவு நடந்த மோதலைத் தொடர்ந்து சீனாவின் ஏகாதிபத்தியக் கொள்கையால் பாதிக்கப்பட்டுள்ள தைவான்‌ மற்றும் ஹாங்காங் ஆகிய நாட்டுக் குடிமக்கள் ‌இந்தியாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம் சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக விஷ்ணுவின் அவதாரமான ராமர், சீன டிராகனை அழிக்க அம்பு விடுவது போன்ற படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

தைவான் டைம்ஸ் பத்திரிக்கை இந்தப் படத்தை "Photo of the Day" என்று குறிப்பிட்டுள்ளது. "லடாக் எல்லைப் பிரச்சினையில் சீன டிராகனை அழிக்க தயார் நிலையில் இருக்கும் ராமர்" என்ற குறிப்புடன் அந்த படத்தை வெளியிட்டுள்ளது. அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

"எல்லையின் இருபக்கங்களிலும் நாட்டுப் பற்று உச்சத்தை எட்டிய நிலையில், விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான ராமர் வில்லை வளைத்து பெரிய அம்பை சீன டிராகன் மீது செலுத்தத் தயாராவது போல் அமைந்துள்ள இந்தப் படத்தில் "நாங்கள் வெற்றி பெறுகிறோம்; நாங்கள் கொல்கிறோம்" என்று பொருள்படும் "We Conquer. We kill" என்ற‌ வாசகம் இடம் பெற்றுள்ளது."

ஹாங்காங்கைச் சேர்ந்த ஹோ சாய் லெய் என்பவர் அவரது ட்விட்டர் பக்கத்தில் இந்தப் படத்தைப் பகிரந்ததாகவும் "ஒரு இந்திய நண்பர் இந்த நேர்த்தியான இந்திய-சீன போர்ப் பதாகையை அதற்குள் செய்து விட்டார்" என்று கூறி படத்தைப் பதிவிட்டுள்ளார் என்றும் தைவான் டைம்ஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பளபளக்கும் கைப்பிடியுடன் கூடிய வாளும் கூர்முனை கொண்ட அம்பும் தாங்கிய வீர கோதண்டராமரின் உருவம் போருக்கு தயாராக இருக்கும் வீரனைப் போல் ஆவேசமாக இருப்பதாக இந்தப் படம் வரையப்பட்டுள்ளது. போருக்கு தயாராக இருப்பதை உணர்த்தும் வகையில் கவசமும் உடையும் காலணிகளும் அணிவித்து வரையப்பட்டுள்ளதால் பார்த்த உடன் நமக்குள்ளும் ஒரு உத்வேகம் ஏற்படுவது போல் தோன்றுகிறது. எனவே அனைவராலும் விரும்பப்படும் இந்தப் படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்த படத்தை பகிர்ந்ததற்காக ஹோ சாய்க்கு நன்றி தெரிவித்த இந்தியர்கள் ஹாங்காங் மற்றும் தைவானுக்கு தங்களது ஆதரவையும் பதிவு செய்தனர். இரண்டாம் உலகப் போரின் போது பாஸிஸ சக்திகளிடம் இருந்து ஹாங்காங்கைக் காப்பற்ற உயிர்த்தியாகம் செய்த பிரிட்டிஷாரின் கீழ் போரிட்ட இந்திய வீரர்களுக்கு நன்றி தெரிவித்து சில ஹாங்காங் வாசிகளும் பதிவிட்டனர்.

தாங்கள் சீனாவின் ஒரு பகுதி அல்ல, தனி நாடு என்று நிரூபிக்க போராடி வரும் தைவானுடன் இந்திய நட்புறவு மேம்பட்டு வரும் நிலையில் ‌இந்தியாவிற்கு ஆதரவாக தைவான் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் தைவான் அதிபர் சேய் இங்-வன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற பின் நடந்த பதவி ஏற்பு விழாவில் காணொளி வாயிலாக இந்திய எம்பிக்கள் இருவர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Similar News