சென்னையில் கார்பன் உற்பத்தி அதிகரிப்பது அசாதாரணமான மழைப் பொழிவுக்கு வழிவகுக்கும் - மத்திய அறிவியல்துறை எச்சரிக்கை.!
சென்னையில் கார்பன் உற்பத்தி அதிகரிப்பது அசாதாரணமான மழைப் பொழிவுக்கு வழிவகுக்கும் - மத்திய அறிவியல்துறை எச்சரிக்கை.!
பருவநிலை மாற்றம் தொடர்பான பேரழிவுகளால் ஏற்படும் மரணங்களின் அதிகபட்ச சராசரியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. எதிர்காலத்திலும் இந்த நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்காது, குறிப்பாக சென்னை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் முன்னேற்றத்துக்கு வாய்ப்பிருக்காது என்று தெரிகிறது.
சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிலையத்தின் (ஐ.ஐ.டி.) ஆராய்ச்சியாளர்கள் நடத்திய மாதிரி ஆய்வில், எதிர்காலத்தில் இதுபோன்ற பருவநிலை மாற்றம் தொடர்பான, அசௌகரியமான சூழ்நிலைகள் ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது.
கார்பன் உற்பத்தி அதிகரிப்பு காரணமாக சென்னைப் பகுதியில் அசாதாரணமான மழைப் பொழிவு நிகழ்வுகளுக்கு உகந்த சூழ்நிலைகள் ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எதிர்காலத்தில் மழைப்பொழிவு நாளில், மழைப்பொழிவு இப்போதுள்ளதை விட 17.37 சதவீதம் அதிகமாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
2075 ஆம் ஆண்டுக்கு இந்த கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தனிநபர் பசுமைக்குடில் வாயு உற்பத்தி (GHG) அதிகபட்ச ஆபத்து வரம்பில் இருக்கும் நகரங்களில் ஒன்றாக சென்னை உள்ளது.
``அடர்வு அதிகரிப்பு மற்றும் இதுபோன்ற மழைப் பொழிவு நிகழ்வுகள் பூகோள ரீதியிலான பரவல் ஆகியவற்றால், தீவிர வெள்ளம் ஏற்படும். எதிர்காலத்தில் அதிக நாட்களுக்கு இந்த பாதிப்பு இருக்கலாம். அதனால் நகர மக்களுக்கு ஆபத்து, சேதாரம் அதிகமாகும் ஆபத்து உள்ளது'' என்று சென்னை ஐ.ஐ.டி.யின் முன்னோடி ஆராய்ச்சியாளர் பேராசிரியர் சி. பாலாஜி தெரிவித்துள்ளார். மழைப் பொழிவின் அளவு 183.5%, 233.9%, மற்றும் 70.8%. அளவுக்கு அதிகரிக்கலாம் என்றும் அந்த ஆராய்ச்சியில் வலியுறுத்தி கூறப்பட்டுள்ளது.