ஜப்பான் கடல் எல்லைக்குள் ஊடுருவிய சீனக் கப்பல்கள் - கொந்தளிக்கும் ஜப்பான்!

ஜப்பான் கடல் எல்லைக்குள் ஊடுருவிய சீனக் கப்பல்கள் - கொந்தளிக்கும் ஜப்பான்!

Update: 2020-07-04 05:21 GMT

கிழக்கு சீனக் கடலில், சீனா- ஜப்பான் ஆகிய இரு நாடுகளும் உரிமை கொண்டாடும், ஆனால் ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருக்கும் செங்காகு தீவுகளின் அருகே, இரண்டு சீன கடலோர காவல்படை கப்பல்கள் ஜப்பானிய பிராந்திய கடலுக்குள் ஊடுருவியது. இது தொடர்பாக சீனாவிடம் எதிர்ப்புத் தெரிவித்ததாக, ஜப்பான் வெள்ளிக்கிழமை(ஜூலை 3) தெரிவித்துள்ளது.

ஊடுருவிய இரண்டு சீனக் கப்பல்களும் வியாழக்கிழமை (ஜூலை 2) மாலை 4:50 மணியளவில் (உள்ளூர் நேரம்) செங்காகு தீவுகளைச் சுற்றியுள்ள ஜப்பானிய பிராந்திய கடலுக்குள் நுழைந்தன, மேலும் உட்சூரி தீவுக்கு மேற்கே 7 கி.மீ தூரத்தில் ஒரு ஜப்பானிய மீன்பிடி படகை நெருங்க முயற்சித்ததாக ஜப்பான் கடலோர காவல்படை தெரிவிக்கிறது.

இந்த இரண்டு சீன கப்பல்களும், ஜப்பானால் நிர்வகிக்கப்படும் பிராந்திய நீரில் இருப்பதால், உடனடியாக இப்பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று ஜப்பான் கோரியதாக தலைமை அமைச்சரவை செயலாளர் யோஷிஹைட் சுகா தெரிவித்தார்.

"ஜப்பானிய மீன்பிடி படகுகளை நெருங்க முயற்சிப்பதை நிறுத்திவிட்டு, உடனடியாக எங்கள் பிராந்திய நீரை விட்டு வெளியேற வேண்டும் என்று நாங்கள் கடுமையாக வலியுறுத்தி வருகிறோம். நாங்கள் இந்த விஷயத்தை அமைதியாகவும் உறுதியுடனும் தொடர்ந்து கையாள்வோம்." என்று சுகா ஒரு செய்தி மாநாட்டில் கூறினார்.

மேலும் ஜப்பான் கடலோர ரோந்து கப்பல்கள், சீனக் கப்பல்களை உன்னிப்பாகக் கவனித்து, ஜப்பானிய மீன்பிடி படகின் பாதுகாப்பை உறுதி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

ஜூன் 22-க்குப் பிறகு ஒரு சீனக் கப்பல் செங்காகஸைச் சுற்றியுள்ள ஜப்பானிய பிராந்திய கடலுக்குள் நுழைவது இதுவே முதல் முறையாகும் என்று ஜப்பான் டைம்ஸ் செய்தி தெரிவிக்கின்றன. இந்தத் தீவு சீன மொழியில் டயோயு என்று அழைக்கப்படுகிறது.

ஜூன் 22-ல் தான், ஜப்பான் ஒகினாவா மாகாணத்தில் உள்ள இஷிகாகி நகர சபை, செங்காகு தீவுகளை உள்ளடக்கிய நிர்வாகப் பகுதியை மறுபெயரிடுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது.

டோனோஷிரோவிலிருந்து டோனோஷிரோ செங்காகு என்று பெயர் மாற்றம் செய்ததற்கு சீனா கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தது.

Cover Image Courtesy: The New York Times

Similar News