பாகிஸ்தான் தூதரக பணியாளர்களின் எண்ணிக்கையை 50% ஆக குறைக்க உத்தரவு.!

பாகிஸ்தான் தூதரக பணியாளர்களின் எண்ணிக்கையை 50% ஆக குறைக்க உத்தரவு.!

Update: 2020-06-24 02:34 GMT

இயல்பாகவே இந்தியாவை சீண்டிப் பார்க்கும் பாகிஸ்தான் தற்போது சீனாவின் தூண்டுதலால் தீவிரவாதத்தை ஊக்குவிப்பது போக தூதரக அதிகாரிகளைக் கடத்துவது, துரத்துவது போன்ற மிகக் கேவலமான செயல்களில் ஈடுபட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரிந்து வந்த இரு அதிகாரிகள் உளவு பார்த்ததாகவும் அரசு ஆவணங்களை வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்டனர்.

இந்த நிகழ்வுகளின் பின்னணியில் தற்போது பாகிஸ்தான் தூதரக பணியாளர்களின் எண்ணிக்கையை 50% ஆக குறைக்குமாறு இந்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதை அடுத்த ஏழு நாட்களுக்குள் செய்யுமாறு பாகிஸ்தான் ஹை கமிஷனர் சையது ஷாவிடம் கூறப்பட்டதாகவும்‌ வெளியுறவுத்துறை அமைச்சகத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

ஹைதர் ஷாவை வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்துக்கு அழைத்து பாகிஸ்தான் தூதரக பணியாளர்களின் நடவடிக்கைகளைப் பற்றி பல முறை எச்சரித்த போதும் அவர்கள் உளவு பார்ப்பது, தீவிரவாத அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவது போன்ற காரியங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாகவும் கடந்த மே 31 அன்று கையும் களவுமாக பிடிக்கப்பட்ட இரு அதிகாரிகள் இதற்கு ஒரு உதாரணம் என்றும் குறிப்பிட்டு பாகிஸ்தான் தூதரக பணியாளர்களின் எண்ணிக்கையை 50% ஆக குறைத்து விடுமாறு கேட்டுக்கொண்டதாக வெளியுறவுத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது போதாதென்று பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் இருக்கும் இந்திய தூதரக அதிகாரிகளை அவர்களது தூதரகம் சார்ந்த சட்டத்திற்கு உட்பட்ட பணிகளை செய்யவிடாமல் அச்சுறுத்தும் வேலையில் ஈடுபட்டுள்ளதாகவும், சில நாட்களுக்கு முன்பு இரு இந்திய அதிகாரிகளை துப்பாக்கி முனையில் கடத்தி துன்புறுத்தியது பாகிஸ்தான் எவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்கிறது என்பதை சுட்டிக் காட்டுவதாகவும் தெரிவித்துள்ளது.

அந்த இரு அதிகாரிகளும் 12 மணிநேர விசாரணைக்கு பின்பு உடலில் காயங்களுடன் இந்திய தூதரகத்துக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் ஜூன் 22 அன்று இந்தியா திரும்பிய அவர்கள் பாகிஸ்தானிய அமைப்புகள் தங்களிடம் எவ்வாறு காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டன என்பதைப்பற்றி விரிவாக விவரித்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் பொறுப்பாளர் பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ ஆட்களால் துரத்தப்பட்டு அச்சுறுத்த முயற்சி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய நடத்தை வியன்னா மாநாட்டு விதிகள் மற்றும் தூதரக அதிகாரிகளை நடத்தும் விதம் குறித்த இரு தரப்பு உடன்படிக்கைகளை பாக்கிஸ்தான் பின்பற்றவில்லை என்று காட்டுவதாக உள்ளது என்றும் வெளியுறவுத்துறை அமைச்சக அறிக்கை பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டுகிறது. மாறாக பாகிஸ்தானின் எல்லை தாண்டிய வன்முறை மற்றும் தீவிரவாதத்தின் உள்ளார்ந்த பகுதியாக பாகிஸ்தான் தூதரகம் செயல்படுகிறது என்றும் குற்றம் சாட்டியுள்ள அந்த அறிக்கையில் இந்தியாவும் இஸ்லாமாபாத்தில் உள்ள தனது தூதரகத்தில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கையை 50% குறைத்து விடுவதாகக் கூறப்பட்டுள்ளது.

Similar News