ஜி.டி.பியில் 15% அளவுக்கு சுயசார்பு இந்தியா திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு.!
ஜி.டி.பியில் 15% அளவுக்கு சுயசார்பு இந்தியா திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு.!
பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் விதமாக தயாரிப்பு துறையில் குறிப்பிட்ட பிரிவுகளை தேர்ந்தெடுத்து மத்திய அரசு உற்பத்தி சார் உதவி தொகை திட்டத்தை அறிவித்திருந்தது. இந்தத் திட்டத்தின் கீழ் செல்போன் தயாரிப்பு, மின்னணு சாதனங்கள் தயாரிப்பு, மருந்து பொருட்கள் தயாரிப்பு மற்றும் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு துறைகளுக்கு ₹ 51,355 கோடி ரூபாய் அளவிலான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில் இதுபோன்று மேலும் 10 உற்பத்தி பிரிவுகளை இந்த திட்டத்தின் மூலம் ஊக்குவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பொருளாதார மந்த நிலையால் ரியல் எஸ்டேட் துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வீட்டுவசதி துறை நிறுவனங்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் உதவும் வகையில் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 18 லட்சம் வீடுகளை கட்டி முடிக்கும் இலக்கை அடைய உதவும் வண்ணம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தொகையைவிட 18,000 கோடி ரூபாய் அதிகமாக விடுவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியத் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வதை ஊக்குவிக்கும் வகையில் EXIM வங்கி மூலமாக வளரும் நாடுகளுக்கு ₹ 3000 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் வாயிலாக பயன் பெற கடன் உதவித் தொகையில் 75 சதவீதம் அளவுக்கு இந்தியாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும் என்று கடன் உதவி பெறும் நாடுகளுக்கு நிபந்தனை விதிக்கப்படும்.
இதன் வாயிலாக ரயில்வே, மின்சாரம், சாலை வசதி மற்றும் ஆட்டோமொபைல் ஆகிய உற்பத்தித் துறைகளுக்கு உதவும் வண்ணம் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் $ 10.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள 811 ஏற்றுமதி திட்டங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களைப் பாதுகாக்க செய்யப்பட்டு வரும் தடுப்பூசி ஆராய்ச்சிகளுக்கு ₹ 900 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி கோவிட் சுரக்ஷா மிஷன் அமைப்புக்கு வழங்கப்பட உள்ளது. இது வரை இத்தகைய திட்டங்களின் மூலம் நாட்டின் ஜி.டி.பியில் 15% அளவிலான நிதி பொருளாதார மேம்பாட்டுக்காக ஆத்மநிர்பார் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளது.