இருமடங்கு அதிகரித்த சோலார் பேனல் ஏற்றுமதி - ஊக்குவித்தால் இன்னும் சாதிப்போம் என்று சூளுரைக்கும் நிறுவனங்கள்!

இருமடங்கு அதிகரித்த சோலார் பேனல் ஏற்றுமதி - ஊக்குவித்தால் இன்னும் சாதிப்போம் என்று சூளுரைக்கும் நிறுவனங்கள்!

Update: 2020-07-07 15:04 GMT

சீனாவில் இருந்து சோலார் செல்களும் பேனல்களும் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுவதால் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை ‌மேலோங்கி இருக்கும் நிலையில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் செல்கள் மற்றும் பேனல்களின் ஏற்றுமதி விலை மதிப்பின் அடிப்படையில் கிட்டத்தட்ட இரண்டு‌ மடங்காக அதிகரித்துள்ள செய்தி வெளியாகியுள்ளது.

மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் படி கடந்த நிதியாண்டில் ₹ 847 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில் 2019-20 நிதியாண்டில் ₹ 1506 கோடி ரூபாய் அளவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. விலை மதிப்பின் அடிப்படையில் இரண்டு மடங்கு அதிகரித்து இருந்தாலும் எண்ணிக்கையின் அடிப்படையில் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதாவது கிட்டத்தட்ட 25 லட்சம் சோலார் செல்கள் மற்றும் பேனல்கள் 2018-19 நிதியாண்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில் தற்போது 69 லட்சம் செல்கள் மற்றும் பேனல்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் சீனா சோலார் செல்கள் மற்றும் பேனல்களின் அளவுடன் ஒப்பிடும்போது இது குறைவுதான் என்றாலும் தகுந்த ஊக்கம் அளிக்கப்படும் பட்சத்தில் சர்வதேச சந்தையில் சீன தயாரிப்புகளுடன் போட்டி போடும் வகையில் தரமான மலிவான சோலார் செல்கள் மற்றும் பேனல்களைத் தங்களாலும் தயாரித்து ஏற்றுமதி செய்ய முடியும் என்றும் சுயசார்பு நிலையை எட்ட முடியும் என்றும் அதானி, டாடா பவர்ஸ் போன்ற தயாரிப்பு நிறுவனங்கள் கூறியுள்ளன.

சூரிய மின்சக்தி தயாரிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்பட ஆரம்பித்திருந்த புதிதில், பத்தாண்டுகளுக்கு முன், இந்திய தயாரிப்புகள் தான் உலகெங்கும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் சீனா அதிக அளவில் உற்பத்தி செய்யக்கூடிய தொழிற்சாலைகளை நிறுவி $ 1.2/வாட் என்று இருந்த விலையை $ 0.18/வாட் என்ற நிலைக்கு கொண்டு வந்த பிறகு இந்திய நிறுவனங்களின் ஏற்றுமதி குறைந்து விட்டது. அப்படியிருந்தும் இப்போது கூட அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளுக்கே இந்திய தயாரிப்புகள் ஏற்றுமதி செய்வது குறிப்பிடத்தக்கது.

நன்றி : ஸ்வராஜ்யா

Similar News