புதுச்சேரி : வரலாற்றில் முதல்முறையாக மரத்தடியில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டம்.!

புதுச்சேரி : வரலாற்றில் முதல்முறையாக மரத்தடியில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டம்.!

Update: 2020-07-26 05:20 GMT

புதுச்சேரி மாநில சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 20ந்தேதி தொடங்கியது இந்த கூட்டத்தொடரில் மூன்று நாட்கள் பங்கேற்ற என்.ஆர். காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயபாலுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து சட்டப்பேரவை முழுவதும் கிருமி நாசினி அடிக்கப்பட்டு சட்டப்பேரவை கூட்டரங்கம் மூடப்பட்டது. இதனால் இன்று நடைபெறுவதாக இருந்த சட்டபேரவை கூட்டத்தொடரை, சட்டமன்ற வளாகத்தில் உள்ள பொதுவெளியில் மரத்தடியின் நடத்தப்படும் என்று சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து, அங்கு பந்தல் அமைக்கப்பட்டு, இருக்கைகள் போடப்பட்டது. ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இருக்கைகள் போடப்பட்டு சபாநாயகர் சிவக்கொழுந்து பேரவையை தொடங்கி வைத்தார். இதையடுத்து சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்றது. பேரவை தொடங்கிய உடன் சபாநாயகர் சிவக்கொழுந்து மரத்தடியில் சட்டப்பேரவை நடைபெறுவதால் உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட

அனைத்து துறைகளுக்குமான நிதி ஒதுக்கீடு செய்யும் பிரேரணையை முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் முன்மொழிந்தார்கள். தொடர்ந்து விவாதம் நடைபெற்றது இதனையடுத்து குரல் வாக்கெடுப்புடன் நிதி ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.

முன்னதாக அரசு எந்தவித கொரோனா தடுப்பு நடவடிக்கையும் எடுக்காததால் சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது என்றும், அதனால் அரசை கண்டித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தரையில் அமர்ந்து போராட்டம் செய்தனர். இதனால் சட்டப்பேரவை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நிறைவுரையாற்றிய முதலமைச்சர் நாராயணசாமி சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் சபாநாயகர், துணை சபாநாயகர் உட்பட அமைச்சர்கள், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் 7 நாட்களுக்கு தனிமை படுத்திக்கொள்ள அறிவுறித்தினார். மேலும் நாளை சட்டமன்ற வளாகத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை என நடத்தப்படும் என தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் பேரவையை ஒத்திவைத்தார் சபாநாயகர் சிவக்கொழுந்து. புதுச்சேரி வரலாற்றில் முதல்முறையாக திறந்தவெளியில் வேப்ப மரத்தடியில் சட்டமன்ற கூட்டம் நடைபெற்றது இதுவே முதல்முறை என்பது குறிப்பிட்டது.

Similar News