இன்று நடைபெறும் தர்ம சக்கரா தின விழாவில் பிரதமர் உரையாற்றுகிறார்!

இன்று நடைபெறும் தர்ம சக்கரா தின விழாவில் பிரதமர் உரையாற்றுகிறார்!

Update: 2020-07-04 03:56 GMT

இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சர்வதேச புத்தமதக் கூட்டமைப்பு ஜுலை 4, 2020 அசதா பௌர்ணமியை தர்மசக்கரா தினமாகக் கொண்டாடுகிறது.

உத்தரப்பிரதேசத்தின் வாராணாசிக்கு அருகில் உள்ள தற்போது சாரநாத் என்று அழைக்கப்படும் ரிசிபட்டனாவில் அமைந்துள்ள மான் பூங்காவில் தனது முதல் 5 சீடர்களுக்கு புத்தர் முதன் முதலாக உபதேசம் செய்த நாளாக இந்தப் பௌர்ணமி தினம் அனுசரிக்கப்படுகிறது.

இந்த தினத்தை உலகமெங்கிலும் உள்ள புத்த மதத்தினர் தர்ம சக்கரா பர்வட்டனா அல்லது தர்ம சக்கர உபதேச தினமாக கொண்டாடுகின்றனர்.

இந்த தினத்தை புத்த மதத்தினர் மற்றும் இந்துக்கள் என இருவருமே குரு பூர்ணிமா என்று தங்களின் குருக்களுக்கு மரியாதை செய்யும் விதமாக கொண்டாடுகின்றனர்.

புத்தரின் அறிவொளி, அவரின் தர்ம போதனைகள் மற்றும் மகாபரி நிர்வாணம் ஆகியன நிகழ்ந்த இடம் இந்தியா என்ற வரலாற்றுப் பெருமையைக் கருத்தில் கொண்டு மாண்புமிகு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ராஷ்டிரபதி பவனில் இருந்து தர்மசக்கரா தினத்தைத் தொடங்கி வைப்பார்.

இந்தத் தருணத்தில் புத்தரின் அமைதி மற்றும் நீதி தொடர்பான போதனைகளை வலியுறுத்தியும், புலன்களால் ஏற்படும் துன்பங்களில் இருந்து விடுதலை பெற அவர் காட்டிய நிர்வாணத்தை அடையும் எட்டு வழிப் பாதையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும் பிரதம மந்திரி நரேந்திர மோடி காணொளிக் காட்சி மூலம் உரையாற்றுவார்.

கலாச்சார அமைச்சர் பிரகலாத் பட்டேல் மற்றும் சிறுபான்மையினர் உறவுகள் இணையமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோரும் தொடக்க நிகழ்வில் உரையாற்றுகின்றனர்.

இந்த நிகழ்வில் மங்கோலிய ஜனாதிபதியின் சிறப்பு உரையும் வாசித்துக் காட்டப்படுவதோடு இந்தியாவில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு மங்கோலியாவில் பல நூற்றாண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வரும் மதிப்புமிகுந்த புத்தமதக் கையெழுத்துப் பிரதியும் மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப்படும்.

உலகின் பல பகுதிகளிலும் இருக்கின்ற புத்தமத உயர்நிலைத் தலைவர்கள், மாஸ்டர்கள் மற்றும் நிபுணர்கள் ஆகியோரின் உரைகள் சாரநாத் மற்றும் புத்தகயாவில் இருந்து ஒலிபரப்பப்படும்.

கோவிட் - 19 பெருந்தொற்றுப் பரவலின் காரணமாக முழு நிகழ்வும் மெய்நிகர் காட்சியாகவே நடத்தப்படும்.

இந்த ஆண்டு மே 7-ஆம் தேதி காணொளி வழியாக வைசாக் (புத்த பூர்ணிமா) வெற்றிகரமாகக் கொண்டாடப்பட்டது போன்றே இந்த விழாவும் கொண்டாடப்படும். உலகம் முழுவதும் உள்ள சுமார் 30 லட்சம் பக்தர்கள் நேரடி இணைய ஒளிபரப்பு மூலமாக இந்த நிகழ்வை பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Similar News