இந்தியாவின் உள்நாட்டு விஷயங்களில் கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்க மற்ற நாடுகளுக்கு குடியரசுத் துணைத்தலைவர் அறிவுறுத்தல்.!
இந்தியாவின் உள்நாட்டு விஷயங்களில் கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்க மற்ற நாடுகளுக்கு குடியரசுத் துணைத்தலைவர் அறிவுறுத்தல்.!
அண்டைநாடுகள் உள்ளிட்டு, மற்ற நாடுகள் இந்தியாவின் உள்நாட்டு விஷயங்களில் கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்குமாறு குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கைய நாயுடு இன்று அறிவுறுத்தினார்.
ஜம்மு-காஷ்மீர் தொடர்பான 370வது பிரிவு நீக்கம் என்ற முடிவானது நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, இறையாண்மை ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காக பொதுவான நலன்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்பதையும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
முன்னாள் வெளியுறவு அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜ் அவர்களின் முதலாவது நினைவு தினத்தை ஒட்டி பஞ்சாப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த திருமதி. சுஷ்மா சுவராஜ் முதலாவது நினைவு சொற்பொழிவை நிகழ்த்திய குடியரசுத் துணைத்தலைவர், இந்தியா நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பின்பற்றி வரும் ஒரு நாடு; 370வது பிரிவை அகற்றுவது என்ற முடிவு நாடாளுமன்றத்தில் விரிவான விவாதங்களுக்குப் பின்னர் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது என்பதையும் சுட்டிக் காட்டினார்.
மற்ற நாடுகளின் விஷயங்களில் தலையிடுவதற்குப் பதிலாக தங்களது சொந்த நாட்டு விஷயங்களில் இதர நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் திரு. நாயுடு கேட்டுக் கொண்டார்.
இறப்பதற்கு முன்பாக திருமதி. சுஷ்மா சுவராஜ் 370வது பிரிவு குறித்து வெளியிட்ட கருத்துக்களை சுட்டிக் காட்டிய குடியரசுத் துணைத்தலைவர் வெளியுறவு அமைச்சர் என்ற வகையில் இந்தியாவின் நிலைபாட்டை மிகவும் திறமையோடு அவர் வெளிப்படுத்தி வந்ததோடு, அவற்றை மிகுந்த இனிமையோடும், மென்மையோடும் வெளிப்படுத்தினார் என்று குறிப்பிட்டார்.