"ராமர் உண்மையிலேயே இருந்தாரா என்பதற்கு ஆதாரம் இல்லை" - காங்கிரஸ் தலைவரின் அடாவடிப் பேச்சு!
"ராமர் உண்மையிலேயே இருந்தாரா என்பதற்கு ஆதாரம் இல்லை" - காங்கிரஸ் தலைவரின் அடாவடிப் பேச்சு!
இந்துக்களுக்கு விரோதமாக நடந்து கொள்வது காங்கிரஸ் கட்சிக்கு ஒன்றும் புதிதில்லை என்றாலும் தற்போது அதன் தலைவர்களுள் ஒருவர் தொலைக்காட்சி நேரலை விவாதத்திலேயே பகவான் ராமர் உண்மையிலேயே இந்த பூமியில் அவதரித்தாரா என்பது பற்றி உறுதியாக கூற முடியாது என்று பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும் ஐந்தாம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகளை தொடங்கும் விதமாக பூமி பூஜை நடக்க இருப்பதை ஒட்டி Zee News செய்தி சேனல் ஒரு விவாத நிகழ்ச்சியை நடத்தியது. இதில் பேசிய காங்கிரஸ் தலைவர் குமார் கெட்கர் பகவான் ராமர் உண்மையிலேயே அவதரித்தாரா என்பது உறுதியாக தெரியவில்லை என்றும் அவர் இலக்கியப் படைப்பாக இருக்கலாம் என்றும் பேசி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார்.
Zee News நடத்திய இந்த விவாதத்தின் இடையில் நெறியாளர், "பகவான் ராமர் உண்மையிலேயே இருந்தார் என்பதை நீங்களும் காங்கிரஸ் கட்சியும் நம்புகிறீர்களா" என்று கேட்ட போது "ராமாயணம் இருப்பதால் தான் ராமர் என்ற ஒருவர் இருக்கிறார். ராமர் என்ற ஒருவர் வரலாற்றில் இருந்தாரா அல்லது அவர் வெறும் இலக்கிய கதாபாத்திரமா என்ற விஷயத்தில் முடிவு இன்னும் எட்டப்படவில்லை. வால்மீகி ஒரு சிறந்த காவியத்தைப் படைத்தார் அதன் விளைவுகள் இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் காணக் கிடைக்கின்றன. ஆனால் வரலாற்று ரீதியாக அவர் உண்மையிலேயே இருந்தாரா என்று எனக்குத் தெரியவில்லை" என்று கூறியுள்ளார்.
இந்த வினோதமான கருத்தைப் பற்றி விளக்கம் கேட்கப்பட்டபோது நேபாள பிரதமர் ஷர்மா ஒலி பகவான் ராமரைப் பற்றி ஆதாரமற்ற தகவல்களை கூறியதை மேற்கோள்காட்டி நழுவ முயற்சித்தார். நேபாள பிரதமர் ஷர்மா ஒலி இந்தியா பொய்யான அயோத்தியை உருவாக்கி விட்டதாகவும் உண்மையில் ராமர் நேபாளத்தில் உள்ள பிர்கஞ்ச் கிராமத்தில்தான் மகறந்தார் என்றும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இதை மேற்கோள் காட்டி "ராமர் இருந்தார் என்பதற்கு வரலாற்று ரீதியான ஆதாரம் இல்லை என்பதால்தான் நேபாள பிரதமர் உண்மையான அயோத்தி நேபாளத்தில் உள்ளது என்று கூறினார்" என்று தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்த முயற்சித்திருக்கிறார்.