கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை: சென்னையில் மத்திய குழு ஆய்வு.! #Covid19 #Chennai

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை: சென்னையில் மத்திய குழு ஆய்வு.! #Covid19 #Chennai

Update: 2020-07-10 02:17 GMT

தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்த போதிலும் கொரோனா பரவலின் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. தமிழகத்தில் நேற்று புதிதாக 4,231 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 26 ஆயிரத்து 581 ஆக அதிகரித்து உள்ளது.

நேற்று புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்ட 4,231 பேரில் 1,216 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.

தமிழ்நாட்டில் நேற்று கொரோனாவுக்கு 65 பேர் பலியானதை தொடர்ந்து, சாவு எண்ணிக்கை 1,765 ஆக உயர்ந்து இருக்கிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் ஆர்த்தி அகுஜா தலைமையில், தமிழகத்துக்கான மத்திய அரசின் கண்காணிப்பு அதிகாரி ராஜேந்திர ரத்னு, மின்னணு மருத்துவ ஆவண இயக்குனர் டாக்டர் ரவீந்திரன், மத்திய நோய் பரவல் தடுப்பு நிபுணர்கள் சுகாஸ் தந்துரு, பிரவீன், ஜிப்மர் மருத்துவர்கள் ஸ்வரூப் சாகு, சதீஷ் ஆகிய 7 பேர் கொண்ட மத்திய சுகாதார குழுவினர் நேற்று முன்தினம் சென்னை வந்தனர்.

ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதன்பிறகு மத்திய குழுவினர் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டு அறிந்தனர்.

பின்னர், சென்னை புளியந்தோப்பு கேசவன் பிள்ளை பூங்கா குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள கொரோனா நலவாழ்வு மையத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். அதன்பிறகு பட்டாளத்தில் உள்ள நோய் கட்டுப்பாட்டு பகுதிக்கும், திரு.வி.க. நகர் மண்டலத்தில் உள்ள ஒரு சில கட்டுப்பாட்டு பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் மாலை 4 மணி அளவில் தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சண்முகத்தை சந்தித்து, தமிழகத்தில் நோய்த் தொற்றின் நிலை, மருத்துவ வசதிகள், கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசித்தனர். அதைத்தொடர்ந்து, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், வேலூர், திருவண்ணாமலை, சேலம், தேனி, ராணிப்பேட்டை, ஆகிய 11 மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டனர்.

மத்திய சுகாதார குழுவினர், இன்று (வெள்ளிக்கிழமை) அயனாவரம், தாம்பரம், செங்கல்பட்டு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்கள்.

Similar News