ஆனந்த வாழ்வு தரும் அனுமன் ஜெயந்தி வழிபாடு

அனுமன் என்றாலே மனதில் தனி பராக்கிரமமும் ஒரு நிம்மதியும் ஏற்படும். 23-12- 2022 அன்று அனுமன் ஜெயந்தி விழா பூஜிக்கப்படுகிறது. அதை பற்றிய சிறு தகவல்

Update: 2022-12-21 15:45 GMT

இறப்பில்லாது வாழ்பவர்களை சிரஞ்சீவி என்று அழைப்பார்கள். ராவணன் தன் அண்ணன் என்றாலும் நியாயத்தின் பக்கம் நின்றான் விபீஷணன். பெருமாளுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற தன்னையே அர்ப்பணித்தான் மகாபலி சக்கரவர்த்தி. சிவனே கதி என்று சரணாகதியில் பக்தி செலுத்தியதால் எமனையே வென்றார் மார்க்கண்டேயர்.படிப்பவர்களின் பாவங்களை போக்கும் புராணங்களையும் காவியங்களையும் எழுதினார் வியாசர்.தாயைக் கொன்று தந்தையின் சொல்லை செயல்படுத்தியதுடன் மீண்டும் தாயை உயிர்த்திட்டார் பரசுராமர். கடைசிவரை கட்சி மாறாமல் கௌரவர்களுக்காக தன் வீரத்தை வெளிப்படுத்தினான் துரோனரின் மகன் அஸ்வத்தாமன். இதுபோன்ற செய்கையால் மேற்கொண்ட ஆறு பேரும் இறப்பில்லா 'சிரஞ்சீவி' வாழ்வை பெற்றனர். ஆனால் யார் என்று தெரியாத ராமனுக்காக எந்த எதிர்பார்ப்பும் இன்றி சேவை புரிந்த அனுமனுக்கும் 'சிரஞ்சீவி' பட்டியலில் இடம் உண்டு. ராவணனை அழிக்கும் பொருட்டு ராமனாக அவதரித்தார் மகாவிஷ்ணு. அவருக்கு உதவி புரிய அனைத்து ஜீவராசிகளும் முன்வந்தன.


ராமருக்கு உதவுவதில் தன் பங்கும் இருக்க வேண்டும் என்று நினைத்த சிவபெருமான் தன்னுடைய சக்தியை ஒரு பெண்ணிடம் தருமாறு வாயு தேவனை பணித்தார். அப்போது கிஷ்கிந்தா வனத்தில் அஞ்சனை என்ற வானரப் பெண் தனக்கு குழந்தை வரம் கிடைக்க சிவபெருமானை வேண்டி தவம் இருந்தால். அவளிடம் ஈசனின் சக்தியை கொண்டு போய் சேர்த்தார் வாயு தேவன். அதன் மூலமாக அஞ்சனைக்கு பிறந்தவர்தான் அனுமன். கைகேயியால் வனத்திற்கு அனுப்பப்பட்ட ராமன் அங்கே தன் மனைவியை பறிகொடுக்கிறார். செய்வதறியாத நின்ற ராமனுக்கு வழிகாட்டியாக சிறந்த சேவகனாக தோளோடு  தோல் நின்றவர் அனுமன் தான். அவர்தான் சுக்ரீவனிடம் ராமனை அழைத்துச் சென்றார். வாலிக்கும் சுக்ரிவனுக்கும் இருந்த பகையை முடிவுக்கு கொண்டு வந்தார். சீதையால் சிரஞ்சீவியாக இரு என்று ஆசீர்வதிக்கப்பட்டார். ராமனுக்காக ராவணனிடம் தூது சென்றார்.


ராவணனுடன் ஆன யுத்தத்தில் இந்திரஜித் அம்புபட்டு மூச்சையான லட்சுமணனை காப்பாற்ற சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்து வந்தார். 14 ஆண்டு வனவாசம் முடிந்தும் ராமர் திரும்பி வராததால் தீக்குளிக்க முயன்ற பரதனை காற்றை விட வேகமாக சென்று காப்பாற்றினார். மகாபாரத காலத்தில் கூட அர்ஜுனனின் தேரில் கொடியாக இருந்து அனைத்து ஆபத்துகளையும் தாங்கி நின்றார். இப்படிப்பட்ட பெருமைக்குரியவர் என்பதால் தான் மகாவிஷ்ணு கருடனுக்கு அடுத்தபடியாக தன்னுடைய வாகனமாக அனுமனையும் ஏற்றுக்கொண்டார். அதே சமயம் கருடனுக்கு இல்லாத பெருமை அனுமனுக்கு உண்டு. அது பெரிய திருவடியான கருடன் பெரும்பாலும் பெருமாள் கோவிலில் தனிச் சன்னதியில் அல்லது பெருமாளுக்கு எதிரில் தான் அருள்பாலிப்பார். ஆனால் அனுமன் பெருமாள் கோவில்களில் இருந்தாலும் அவருக்கென்று தனியாகவும் பல ஆலயங்கள் எழுப்பப்பட்டு இருக்கின்றன. அதற்கு அவரது தியாகமும் தன்னலமற்ற இறை சேவையும் தான் காரணம் இப்படிப்பட்ட அனுமனை வழிபட்டு வாழ்க்கையில் அனைத்து வகையான சௌபாக்கியங்களையும் பெற்று வளமோடு வாழ்வோம்.

Similar News