"இனி நான் நிம்மதியாக உயிர் விடுவேன், எனது வாழ்நாள் கனவு நிறைவேறி விட்டது" - பூமி பூஜை குறித்து உபி முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்.!
"இனி நான் நிம்மதியாக உயிர் விடுவேன், எனது வாழ்நாள் கனவு நிறைவேறி விட்டது" - பூமி பூஜை குறித்து உபி முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்.!
இன்னும் சில நாட்களில் அயோத்தியில் ராமர் அவதரித்த இடமான ராமஜென்ம பூமியில் அவருக்கு பிரம்மாண்டமான கோவில் கட்டப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வின் முக்கிய பகுதியான பூமி பூஜை நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. ராமஜென்ம பூமியை இந்துக்கள் மீண்டும் தமதாக்கிக் கொள்ள கிட்டத்தட்ட 500 ஆண்டுகள் ஆகி இருக்கின்றன. கடந்த வருடம் நவம்பர் மாதம் 9ம் தேதி உச்சநீதிமன்றம் ராம பக்தர்களின் சார்பில் வழக்கு தொடர்ந்த ராம் லல்லா விரஜ்மான் அமைப்புக்கு சாதகமாக இடம் ராம் லல்லாவிற்குத் தான் சொந்தம் என்று தீர்ப்பளித்து இந்துக்களின் நீண்ட கால காத்திருப்பை முடித்து வைத்தது. அப்போதிருந்தே நொடியும் தாமதிக்காமல் ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகின்றன. பூமி பூஜை நெருங்கி வரும் நிலையில் 1992 ஆம் ஆண்டு நடந்த நிகழ்வுகளையும், அதில் ராமஜென்ம பூமி இயக்கத்தின் பங்கையும், இயக்கத்தில் பங்கேற்ற தலைவர்களின் பின்னணி மற்றும் பங்களிப்பைப் பற்றி அறிந்து கொள்வோம்.
ராமஜென்ம பூமி என்ற உடனே முதலில் நினைவுக்கு வரும் சில தலைவர்களில் அப்போதைய உத்தரப் பிரதேச முதல்வர் கல்யாண் சிங் முக்கியமானவர். சமீபத்தில் News18 தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கல்யாண்சிங், ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கி விட்டதால் இனிமேல் தான் நிம்மதியாக உயிர் விட முடியும் என்று உணர்ச்சி பொங்க தெரிவித்தார். இனிமேல் தனக்கு வாழ்வில் நிறைவேறாத ஆசை என்று எதுவும் இல்லை என்று கூறிய அவர், தானே ஒரு இராம பக்தர் தான் எனவும் எப்போதும் அயோத்திக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று ஆசைப் பட்டதாகவும் தெரிவித்துள்ளார். விரைவில் ராமரின் தரிசனம் பெற அயோத்திக்கு செல்லவிருப்பதாக கூறியுள்ளார் கல்யாண் சிங்.
மேலும், "எனக்கு எந்த வருத்தமும் இல்லை. மசூதி இடிக்கப்பட்ட பிறகு என் பதவி பறிபோனது; நான் சிறைக்குச் செல்ல வேண்டியிருந்தது, அபராதமும் செலுத்த வேண்டியிருந்தது. ஆனால், இது எதைப் பற்றியும் எனக்கு வருத்தமே இல்லை. ராமரின் மீது எனக்கு ஆழ்ந்த பக்தி இருக்கிறது. எனது வாழ்நாள் கனவு தற்போது நனவாகப் போகிறது. அரசியல் அதிகாரம் என்பது தற்காலிகமானதே. அது இன்று வரும் நாளை போகும். அதை இழந்ததைப் பற்றி எனக்கு எந்த வருத்தமும் இல்லை.ராமர் கோவில் கோடிக்கணக்கான ஹிந்துக்களுக்கானது. அதற்கான பூமி பூஜை நிகழ்வு நடக்கும் நாள் நம் அனைவருக்கும் ஒரு சுப நாள். இனி நான் ஆனந்தமாக மரணத்தை தழுவுவேன்" என்று கல்யாண் சிங் உணர்ச்சிப் பெருக்கெடுக்க பேசியுள்ளார்.