iPhone 11 விலை குறையுமா? மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் சென்னை தொழிற்சாலையில் உற்பத்தி தொடக்கம்!

iPhone 11 விலை குறையுமா? மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் சென்னை தொழிற்சாலையில் உற்பத்தி தொடக்கம்!

Update: 2020-07-24 05:44 GMT

ஆப்பிள் நிறுவனத்தின் முதன்மைத் தயாரிப்பான iPhone 11ஐ உற்பத்தி செய்யும் பணி சென்னைக்கு அருகில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனா, அமெரிக்கா இடையிலான மோதல் போக்கால் பல அமெரிக்க நிறுவனங்கள் சீனாவிலிருந்து வெளியேறி வரும் நிலையில் ஆப்பிள் நிறுவனமும் தனது உற்பத்தி தொழிற்சாலைகளை இந்தியாவிற்கு மாற்றக்கூடும் என்று தகவல்கள் வெளியாகின.

தற்போது அதை உறுதிப்படுத்தும் வண்ணம் சென்னைக்கு அருகிலுள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் iPhone 11 உற்பத்தி தொடங்கியிருப்பதாக தி எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட மாடல் இதுவரை சீனாவில் தயாரிக்கப்பட்டு பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது தற்போது மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த செல்போன்கள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

இதுவரை சீனாவில் தயாரிக்கப்பட்ட போன்கள் இந்தியாவில் விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவதால் 22% இறக்குமதி வரி மிச்சமாகும் என்றும் அதனால் இந்தியாவில் iPhone 11 விலை குறையக்கூடும் என்றும் கணிக்கப்படுகிறது. தயாரிப்பு நிறுத்தப்பட்ட iPhone SE மாடல்களின் புதிய வடிவம் பெங்களூரு அருகிலுள்ள விஸ்ட்ரான் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் என்றும் ஆப்பிள் நிறுவனத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

உற்பத்தி சார்ந்த மானிய உதவித் திட்டத்தின் பலன்களை முழுதாகப் பயன்படுத்திக்கொள்ள எண்ணும் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்கவிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Similar News