நாங்கதான் கிடைச்சோமா? - பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் தவிப்பது ஏன்?

2000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த பெட்ரோல் விற்பனை நிலையங்களை பொதுமக்கள் நாடி வருகின்றனர். அதனால் வருமான வரி நடவடிக்கையை நினைத்து உரிமையாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

Update: 2023-05-23 11:00 GMT

செப்டம்பர் மாதம் 30- ஆம் தேதிக்கு பிறகு ரூபாய் 2000 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை ரிசர்வ் வங்கி அதிரடியாக வெளியிட்டது. அதன்படி ரூபாய் 2000 நோட்டு புழக்கத்தில் இருந்து திரும்ப பெறப்படுவதாகவும் அதனை வைத்திருப்போர் வங்கிகளில் செலுத்தி மாற்றிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.


இந்த நிலையில் மக்கள் பதற்றத்தின் காரணமாக தற்போது ரூபாய் 2000 நோட்டை கண்ணில் படும் இடங்களுக்கெல்லாம் சென்று மாற்றிவருகிறார்கள். இதில் முன்னணியில் இருப்பது பெட்ரோல் பங்குகள் தான் .ஆனால் இப்போது பெட்ரோல் பங்குகளிலும் ரூபாய் 2000 நோட்டை கண்டால் கோபப்பட தொடங்கி விட்டார்கள். ஏன் என்று கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு விளக்கம் சொல்லியும் தவிர்க்கிறார்கள். இது குறித்து தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர் சங்க தலைவர் கே.பி முரளி கூறியதாவது :-


பெட்ரோல் பங்குகளில் ரூபாய் 2000 நோட்டை வாங்குவதில் நிறைய நடைமுறை சிக்கல்கள் இருக்கிறது. ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு பிறகு ரூபாய் 2000 நோட்டுப் பழக்கம் அதிகரித்துள்ளது . ஒரு வாடிக்கையாளர் ரூபாய் 100-க்கு பெட்ரோல் போட்டுவிட்டு ரூபாய் 2000 நோட்டை நீட்டுகிறார். அவருக்கு பாக்கி 1900 தரவேண்டியுள்ளது. இப்படி ஒரு நாளில் 50 பேர் வந்தால் சில்லறைக்கு நாங்கள் எங்கே போவது ? சில்லரை தட்டுப்பாடு ஏற்படுவதால் ரூபாய் 2000 நோட்டை வாங்கவே யோசனை மேலோங்குகிறது.


இதனால் வாடிக்கையாளர்கள் பெட்ரோல் பங்க் ஊழியர்களிடையே வாக்குவாதமே ஏற்படுகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை தொடர்ந்து பழைய 500 ரூபாய் ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் இதே போல் பெட்ரோல் விற்பனையகங்களுக்கு தான் மக்கள் படையெடுத்து வந்தனர். அதை அடுத்து பெட்ரோல் விற்பனையகங்களில் அந்த நோட்டுகளை பெற தடை விதிக்கப்பட்டது.


மேலும் கருப்பு பணத்தை மாற்றிய சந்தேகத்தின் பேரில் பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியது .அதுபோல் இப்போதும் தங்களுக்கு நோட்டீஸ் வருமா என்று பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.

Similar News