மகளின் ஆன்லைன் வகுப்புக்கு ஸ்மார்ட்போன் வாங்க தன்னிடம் இருந்த ஒரே பசுவை விற்ற தந்தை - உண்மையில் நடந்தது என்ன?
மகளின் ஆன்லைன் வகுப்புக்கு ஸ்மார்ட்போன் வாங்க தன்னிடம் இருந்த ஒரே பசுவை விற்ற தந்தை - உண்மையில் நடந்தது என்ன?
சில நாட்களுக்கு முன் ஒரு ஏழை விவசாயி தான் ஏற்கனவே வாங்கி இருந்த கடனை அடைத்து தனது மகளின் படிப்புக்கு உதவும் வகையில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தேவைப்படும் ஸ்மார்ட்போன் வாங்க தன்னிடம் இருந்த பசுவை விற்க நேர்ந்தது என்ற செய்தி பல ஊடகங்களிலும் வெளியானது. இந்த சம்பவம் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார ரீதியான தாக்கங்களை வெளிப்படுத்துவதாக உள்ளது என்று ஊடகங்களில் வெகுவாக விமர்சிக்கப்பட்டது.
தனது மகளின் படிப்பு தடைபடக் கூடாது என்பதற்காக தனது கால்நடையை விற்க நேர்ந்த அந்த மனிதனின் நிலையை எண்ணி பலரும் அனதாபப்பட்டதோடு இந்த சம்பவம் பல ஊடகங்களால் செய்தியாக்கப்பட்டதால் வைரல் ஆனது.
ஆங்கில ஊடகமான NDTV யில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தும் நிலை ஏற்பட்டிருப்பதால் தனது மகளுக்கு கல்வி கிடைக்காமல் போய்விடக் கூடாது என்று எண்ணிய இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த குல்தீப் குமார் என்ற அந்த ஏழை விவசாயி ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள தேவைப்படும் ஸ்மார்ட்போன் வாங்க தனது பசுவை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் என்ற கோணத்தில் செய்தி வெளியிடப்பட்டது.
இந்த விஷயம் வைரலான பின் இமாசல் மாநில நிர்வாகம் அவருக்கு பொருளாதார ரீதியாக உதவி செய்ததாகவும் பசுவை திரும்ப வாங்கித் தருகிறோம் என்று அதிகாரிகள் கூறிய போது அதை மறுத்து விட்டு மோசமான நிலையில் இருக்கும் தனது வீட்டை மத்திய அரசின் வீட்டு உறுதித் திட்டத்தின் கீழ் செம்மைப்படுத்தி தருமாறும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வருபவர்களின் பட்டியலில் தன்னைச் சேர்க்குமாறும் அவர் கேட்டுக் கொண்டதாக NDTV வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு இருந்தது.