பாகிஸ்தான்: மூன்றில் ஒரு விமானி போலி - அதிர்ச்சித் தகவல் அளித்த விமான போக்குவரத்து அமைச்சர்.! #Pakistan #FakePilots

பாகிஸ்தான்: மூன்றில் ஒரு விமானி போலி - அதிர்ச்சித் தகவல் அளித்த விமான போக்குவரத்து அமைச்சர்.! #Pakistan #FakePilots

Update: 2020-06-25 13:18 GMT

பாகிஸ்தானில் 30% க்கும் மேற்பட்ட சிவில் விமானிகள் போலி உரிமங்களைக் கொண்டுள்ளதாகவும், விமானங்களை ஓட்டத் தகுதியற்றவர்கள் எனவும் பாகிஸ்தான் விமான போக்குவரத்து அமைச்சர் குலாம் கான் புதன்கிழமை தெரிவித்தார்.

பாகிஸ்தானின் தேசிய சட்டமன்றத்தில் உரையாற்றிய குலாம் சர்வார் கான், நாட்டில் 262 விமானிகள் விமான ஓட்டிகளுக்கான தகுதி "பரீட்சையைத் தாங்களே எழுதவில்லை" என்றும், அவர்கள் சார்பாக எழுத வேறு ஒருவருக்கு பணம் கொடுத்ததாகவும் கூறினார்.

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (PIA) உட்பட பல வெளிநாட்டு விமானங்களை ஓட்டும் 860 ஆக்ட்டிவ் விமானிகள் பாகிஸ்தானில் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

போலி உரிமங்களை வைத்திருக்கும் அனைத்து விமானிகளையும் PIA உடனடியாக தடை செய்துள்ளது.

"போலி உரிமங்கள் PIA பிரச்சினை மட்டுமல்ல, பாக்கிஸ்தான் விமானத் துறை முழுவதிலும் இந்தப் பிரச்சினை பரவியுள்ளது என்று செய்தித் தொடர்பாளர் அப்துல்லா கான் கூறினார், போலி விமானிகளில் சிலர் வெளிநாட்டு விமானங்களிலும் பறக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தரும் விஷயத்தையும் கூறினார்.

மே 22 அன்று கராச்சியில் 97 பேர் கொல்லப்பட்ட விமான விபத்து குறித்த முதற்கட்ட அறிக்கையின் ஒரு பகுதியாக விசாரணையின் முடிவுகள் புதன்கிழமை அறிவிக்கப்பட்டன. லாகூரிலிருந்து புறப்பட்ட பின்னர் அந்த PIA விமானம் விபத்துக்குள்ளானது, பயணிகள் இருவரை தவிர விமானத்தில் இருந்த மற்ற அனைவரும் விபத்தில் மரணமடைந்தனர். ஜின்னா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள பரபரப்பான குடியிருப்பு பகுதியான மாடல் காலனியில் இந்த விமானம் தரை இறங்கி விபத்துக்குள்ளானது.

விபத்துக்குள்ளான P. K 8303 விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் போலி உரிமங்களை வைத்திருந்தார்களா என்று கான் தெளிவுபடுத்தவில்லை.

விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் விமானம் இறங்கி விபத்து ஏற்படுவதற்கு முன்னர் விமானிகள் கொரோனா வைரஸைப் பற்றி அரட்டை அடித்து வந்ததாகவும், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களின் எச்சரிக்கைகளை பலமுறை புறக்கணித்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"விமானிகள் பயணம் முழுவதும் கொரோனாவைப் பற்றி விவாதித்தனர். அவர்கள் கவனம் செலுத்தவில்லை. அவர்கள் கொரோனா வைரஸ் மற்றும் அதனால் அவர்களது குடும்பங்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைப் பற்றி பேசினர்," என்று கான் கூறினார், விமானிகள் "அதீத நம்பிக்கையுடன்" எச்சரிக்கைகளை புறக்கணித்ததாகக் கூறினார்.

கான் கூற்றுப்படி, விமானம் மிக உயரத்தில் இருப்பதாகவும், அவர்கள் தரையிறங்க முயற்சிக்கக் கூடாது என்றும் மூன்று முறை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் எச்சரித்தும் "கேப்டன் அந்த அறிவுறுத்தல்களுக்கு செவிசாய்க்கவில்லை."

தரையிறங்கும் கியரை வெளியிடாமல் விமானிகள் தரையிறங்க முயன்றனர். விமானத்தின் என்ஜின்கள் இதனால் தரையில் நேரடியாகத் தொட்டன. தீப்பொறிகள் ஏற்பட்டு பலத்த சேதாரம் ஏற்பட்டது. விமானிகள் விமானத்தை மீண்டும் காற்றில் இழுத்தனர், ஆனால் சேதமடைந்த என்ஜின்கள் செயலிழந்து விமானம் விபத்துக்குள்ளானதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Source: CNN 

Similar News