தீவிர இஸ்லாமியவாத அமைப்பின் மீதான தடையை நீக்கிய பாகிஸ்தான்- 'வன்முறையைத் தடுக்கவே' என விளக்கம் !
வருங்காலத்தில் வன்முறையைத் தடுப்பதற்கான வழிமுறையாக "பெரிய தேசிய நலன்" என்று கருதி இம்முடிவை எடுத்திருப்பதாக பாகிஸ்தான் விளக்கமளித்துள்ளது.
தீவிர இஸ்லாமியவாத அமைப்பான தெஹ்ரீக்-இ-லப்பைக் (TLP) மீதான தடையை பாகிஸ்தான் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று முடிவுக்குக் கொண்டு வந்தது.
இஸ்லாமாபாத்தை நோக்கி தான் நடத்தவிருந்த அணிவகுப்பை கைவிடுவதாக TLP அமைப்பிற்கும், பிரதமர் இம்ரான் கானின் அரசாங்கத்துக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து தடை நீக்கப்பட்டது.
வருங்காலத்தில் வன்முறையைத் தடுப்பதற்கான வழிமுறையாக "பெரிய தேசிய நலன்" என்று கருதி இம்முடிவை எடுத்திருப்பதாக பாகிஸ்தான் விளக்கமளித்துள்ளது.
தெஹ்ரீக்-இ-லப்பைக் ஏன் முதலில் தடை செய்யப்பட்டது?
நபி முஹம்மதுவின் கேலிச்சித்திரங்களை, நையாண்டி பிரெஞ்சு இதழான சார்லி ஹெப்டோவில் மறுபிரசுரம் செய்ததற்கு பதிலடியாக TLP அமைப்பு பாகிஸ்தானில் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது. இதைத் தொடர்ந்து இவ்வமைப்பிற்கு தடை விதிக்கப்பட்டது.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் படங்களை மறுபிரசுரம் செய்ததற்கு அளித்த ஆதரவு, முஸ்லிம் உலகம் முழுவதும் பரவலான கோபத்தைத் தூண்டியது.
தெஹ்ரீக்-இ-லப்பைக் (TLP), பாகிஸ்தானில் இருந்து பிரெஞ்சு தூதரை வெளியேற்ற வேண்டும் எனப் போராடியது. இதற்கு பாகிஸ்தான் அரசு ஒப்புக்கொண்டது, ஆனால் இறுதியில் அதை நிறைவேற்றவில்லை.
இத்தகைய போராட்டங்களை அடுத்து இவ்வமைப்பின் தலைவர் சாத் ரிஸ்வி, பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் கைது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
ஏற்கனவே பாகிஸ்தானின் 2018 தேர்தலில் TLP முக்கியத்துவம் பெற்றிருந்தது. குறிப்பாக இஸ்லாத்தை அவமதிக்கும் எவருக்கும் மரண தண்டனை அளிக்கும் இறை நிந்தனை (blasphemy) சட்டத்தை பாதுகாப்பதாக சபதம் செய்தபோது அதற்கான ஆதரவு பெருகியது.