பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானங்கள் ஐரோப்பாவுக்குள் நுழைய ஆறு மாதங்கள் தடை - என்ன நடந்தது.? #PIA #EASA #Pakistan

பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானங்கள் ஐரோப்பாவுக்குள் நுழைய ஆறு மாதங்கள் தடை - என்ன நடந்தது.? #PIA #EASA #Pakistan

Update: 2020-07-01 03:31 GMT

மே 22 அன்று, பாகிஸ்தான் கராச்சியில், வீடுகள் இருக்கும் பகுதியில் PIA விமானம் மோதி விபத்துள்ளானது. விமானத்தில் இருந்த 97 பேரும், தரையில் இருந்த ஒரு குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

முதற்கட்ட விசாரணைகளின்படி, விமானிகள் கொரோனா வைரஸ் பற்றி அரட்டை அடித்துக்கொண்டிருந்ததாகவும், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களின் எச்சரிக்கைகளை பலமுறை புறக்கணித்து, விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் விமானத்தை மோதியதாவும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, ஐரோப்பாவில் சிவில் விமானப் பாதுகாப்புக்குப் பொறுப்பான ஐரோப்பிய ஒன்றிய விமான பாதுகாப்பு நிறுவனம் (EASA), பாகிஸ்தான் சர்வதேச விமான ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு (PIA), ஐரோப்பாவில் இயங்குவதற்கான அங்கீகாரத்தை, ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்தியுள்ளதாக (suspend) டான் செய்திகள் தெரிவித்துள்ளது.

"ஜூலை 1, 2020 முதல் 6 மாத காலத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கு செயல்படுவதற்கான PIA இன் அங்கீகாரத்தை EASA தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இந்த முடிவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கான உரிமை உள்ளது" என்று PIA அறிக்கை வெளியிட்டுள்ளது. 



பாகிஸ்தானில் PIA மற்றும் பல வெளிநாட்டு விமான சேவைகளில், செயலில் உள்ள விமானிகள் (active) 860 பேர் உள்ளனர். கடந்த புதன்கிழமை, பாகிஸ்தான் விமானப் போக்குவரத்து அமைச்சர் குலாம் சர்வார் கான், பாகிஸ்தானில் 262 விமானிகள் "தேர்வை அவர்களாகவே எழுதவில்லை" என்றும், அவர்கள் சார்பாக எழுத வேறு ஒருவருக்கு பணம் கொடுத்ததாகவும் கூறினார்.

பாகிஸ்தானின் சிவில் விமான அமைச்சகம் 250 க்கும் மேற்பட்ட விமானிகளின் பறக்கும் உரிமங்களை "சந்தேகத்திற்குரியது" என்று குறிப்பிட்ட பின்னர் அந்த விமானிகளைப் பறக்க விடாமல் தரையிறக்கியது.(grounded)

மீதமுள்ள அனைத்து விமானிகளும் கூட சரியான தகுதி பெற்றிருப்பார்கள் என "இன்னும் உறுதியாகத் தெரியவில்லை" என்றும், PIA விமான நிறுவனத்தில் தாங்கள் நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும் EASA தெரிவித்ததாக PIA செய்தித் தொடர்பாளர் அப்துல்லா கான் கூறுகிறார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாடாளுமன்றத்தில், PIA மற்றும் பிற அரசு நிறுவனங்களை சீர்திருத்துவதாக உறுதியளித்தார். "நான் எனது தேசத்திடம் இதைத் தான் சொல்ல விரும்புகிறேன்: எங்களுக்கு வேறு வழியில்லை, சீர்திருத்தங்கள் தவிர்க்க முடியாதவை" என்று கூறினார்.

Similar News