கர்ணனை உண்மையில் வஞ்சித்தது யார்? - மீண்டும் பொய்களை பரப்பும் விஷமிகள் - உண்மை இங்கே.!

கர்ணனை உண்மையில் வஞ்சித்தது யார்? - மீண்டும் பொய்களை பரப்பும் விஷமிகள் - உண்மை இங்கே.!

Update: 2020-06-16 02:06 GMT

பகவான் வ்யாஸர் எழுதிய பாரதத்தின் படி *மாவீரன் கொடை வள்ளல் கர்ணன்* பற்றிய உண்மைகளை அறிவோம். நடிகர் திலகம் சிவாஜி நடித்த திரைப்படம் , பி.ஆர் சோப்ரா எடுத்த பழைய தொடர் (டி.டி தொலைக்காட்சியில் வருவது), சில வருடம் முன்பு விஜய் டி.வி-யில் வந்த தொடர் போன்றவை மனிதர்களால் மாறுதலுக்கு உட்படுத்தப்பட்டது. அவை பிரமாணம் அல்ல என்பதை நினைவில் கொள்வோம்.

கோரக்பூர் கீதா பிரஸ் (Gorakpur Gita Press), போறி (BORI) நிறுவனம், கேசரி மோகன் கங்குலி (KM Ganguli) வெளியிட்ட வ்யாஸ பாரதம் ஆகிய புத்தகங்களே இன்றளவில் பிரமாணமாக எடுத்து கொள்ளத்தக்கவை. அவை ஸ்லோகங்களையும் பொருளையும் மட்டுமே (நடந்தது போலவே) வெளியிட்டு உள்ளன. இயன்றவர்கள் அதை வாங்கி படிப்போம். (https://www.sacred-texts.com/hin/m01/index.htm)

இப்பதிவில் வரும் சில விஷயங்கள் நாம் இவ்வளவு காலம் உண்மை என்று நம்பி வரும் கதைகளை ஒத்து இல்லாமல் இருக்கலாம். ஆனால் இவையே வ்யாஸர் எழுதிய பாரதத்தில் உள்ளனவாகும் என்பதை நினைவில் கொண்டு படிப்போம். சமூக, அரசியல் காரணங்களால், வர்ணாஸ்ரம தர்மத்தை தவறான நோக்கம் உடையதாக சித்தரிக்க வேண்டும் என்ற எண்ணத்தால் அவை மாறுபட்டு இருப்பதை ஏற்போம், தெளிவுறுவோம். இராமாயணத்தில் ஸ்ரீ ராமர், சம்பூகனை சூத்திரன் தவம் செய்ய கூடாது, என்று கொன்றார் என பரப்பி விட்ட பொய் போல் மஹாபாரதத்தில் கர்ணன் பல பொய்களை தாங்கியுள்ளான்.

பிறந்தது எப்படி?

துருவாசர் அளித்த வரத்தை சோதிக்க எண்ணிய குந்தி தேவி அதை சூரியனை நோக்கி ஜபித்தாள். அதனால் பிரசன்னம் ஆன சூரிய நாராயணர் அருட் பிரசாதமாக, கர்ணன் குந்தி தேவி கர்ப்பத்தில் உதித்தார். (கர்பம் அடையாமல் உடனே பிறந்தார் என்று கூற படவில்லை. சில மாதம் கழித்தே பிறந்தான்). கர்பம் தரித்தாலும் அது தேவ கர்பம் ஆதலால் அவள் கன்னி தன்மையை இழக்கவில்லை.

எவ்வாறு வளர்ந்தான்?

கவச குண்டலமுடன் ஒளி பொருந்தியவனாக பிறந்த கர்ணனை, ஒரு பெட்டியில் வைத்து கங்கை நதியில் விட்டாள் குந்தி தேவி. அதிரதன் என்னும் தேரோட்டி குழந்தை இன்மையால் வாடினான். கங்கையில் மிதந்து வந்த குழந்தையயை அந்த கங்கை மாதாவின் அருட்பிரசாதமாக ஏற்று வீட்டிற்கு எடுத்து சென்றான். அதிரதனின் மனைவி பெயர் ராதை (பிருந்தாவன ராதை அல்ல). ராதையின் புதல்வன் ஆனதால் ராதேயன் என கர்ணன் அழைக்க பெற்றான். சிறு வயது முதலே அவன் வில்வித்தையில் நாட்டம் கொண்டிருந்தான். இப்படியே அவன் ஹஸ்தினாபுரம் வந்து சேர்ந்து, அதிரதன் - ராதை தம்பதியின் முழு அன்பை பெற்று வளர தொடங்கினான். ராதை - அதிரதன் தம்பதிக்கு பின்னர் குழந்தைகள் பிறந்தனர். ஆதலால் கர்ணன் தனியாக விடப்பட்டான், யாரும் அவனிடம் அன்பு பாராட்டவில்லை, உலகம் அவனை கைவிட்டது என்பதெல்லாம் மாபெரும் பொய்யாகும். ராதையின் அன்பிலும் அதிரதினின் அரவணைப்பிலும் சகோதரர்கள் சூழ ஒரு வாழ்க்கை அவனுக்கு அமைந்திருந்தது என்பதே உண்மை.

இங்கே கவனிக்க வேண்டியது, தேரோட்டி குலத்தில் தாழ்ந்தவன் என்று எங்கும் கூற படவில்லை. தேரோட்டிகளே சில ராஜ்யங்களில் அமைச்சர்களாகவும் இருப்பர். சஞ்சயன் என்னும் தேரோட்டி தான் திருதிராஷ்டிரனின் உற்ற நண்பன் ஆவார். சுமந்த்ரார் என்னும் தேரோட்டி தன் அயோத்தியின் அமைச்சர் ஆவார்.

சூத என்பது எவ்வகையான பிரிவு?

சூத என்னும் மக்கள் ப்ராஹ்மண தாய்க்கும் க்ஷத்ரிய தந்தைக்கும் பிறந்தவர்கள் ஆவர். அவர்களும் நாடாளும் க்ஷத்ரியர்களே. அதிரதன் அங்க தேசத்து மன்னனாக இருந்தான். அவனை வேறு ஒருவன் வெல்ல, தன் ராஜ்யம் விட்டு அகன்று, அவன் தன் நண்பன் திருதிராஷ்ட்ரன் அரண்மனையில் தேரோட்டியாக சேர்ந்தான். அதே போல் அதிரதன் நல்ல செழிப்பு உடையவன் என்பதை மறக்க வேண்டாம். கர்ணன் நல்ல வசதியான குடும்ப சூழலில் தான் வளர்ந்தான் என்பதை ஒருவரும் சொல்லவில்லை.

யாரிடம், எவ்வாறு சிக்ஷை பெற்றான்?

பாண்டவர் கௌரவர் போலவே கர்ணனும் குரு துரோணரிடம் அஸ்திர வித்யை அனைத்தையும் கற்றான். ப்ரம்மாஸ்திரம் உட்பட. க்ருபரிடம் குருகுல கல்வி பெற்றான். அவன் தேரோட்டி மகன் என கூறி அவனை விரட்டவில்லை என்பதே உண்மை. அவன் ஆர்வத்தோடு கற்றான் என்பதில் மறு கருத்து இல்லை.

பின் அவன் ஏன் பரசுராமரிடம் சென்றான்?

ஒரு நாள் துரோணர் ஒரு கடும் சோதனை வைக்க அதில் அர்ஜுனன் மட்டுமே தேர்ச்சி பெற்றான். அவர் மகன் அஸ்வத்தாமன் உட்பட அனைவரும் தோல்வி உற்றனர். அதனால் அவனுக்கு ப்ரஹ்மஷிரா என்னும் அஸ்திரத்தை ஞானத்தை வழங்கினார். ப்ரஹ்மஷிரா இந்த பிரபஞ்சத்தை அழிக்க வல்லது. அதை எதிர்பார்த்து, மற்றவரை அழிக்கும் எண்ணம் உள்ளவரிடம், கொடுப்பது பெரும் ஆபத்து ஆகும். அர்ஜுனன் அதை தவறாக பயன் படுத்த மாட்டான் என்ற முழு நம்பிக்கை கொண்ட பின்னரே அவனுக்கு அதை கற்பித்தார்.

கர்ணன் ப்ரஹ்மஷிரா அஸ்திரம் வித்யயை பயில விழைந்தான். அர்ஜுனனுக்கு தெரியும் ஆதலால் தனக்கும் தெரிய வேண்டும் என்ற எண்ணமே இருந்தது. அவன் அர்ஜுனன் மேல் உள்ள பொறாமையால் அதை தவறாக பயன் படுத்தினால் என்ன ஆகும் என்று பயந்தார். மேலும் துரோணர் வைத்த தேர்விலும் அவன் வெல்லவில்லை. எனவே துரோணருக்கு அவனுக்கு அதை மட்டும் சொல்லித்தர மனம் அனுமதிக்க வில்லை.

அவன் சூத புத்திரன் என்பதால் அவனுக்கு அது மறுக்க படவில்லை. அது மட்டும் இன்றி கர்ணனுக்கு படிக்க வாய்ப்பே கொடுக்க படவில்லை என்பது முற்றிலும் தவறு. கர்ணன் இப்போது இருந்துதிறந்தால் அவனே அதை ஏற்கமாட்டான்.

பரசுராமர் சாபம் அளித்தாரா?

பரசுராமரிடம் அந்தணன் வேடம் தரித்து சென்றான். ஏழு வருடங்கள் எல்லா வித்யையும் கற்றான் (ப்ரஹ்மஷிரா அஸ்திரம் உட்பட). ஆனால் அவன் விதி ஒரு நாள் மாட்டிக்கொண்டான். அதனால் கோபமும் ஏமாற்றமும் உற்ற பரசுராமர், குருவை ஏமாற்றி பெறப்பட்ட வித்யை, சுயநலத்துக்காக பெற பட்ட வித்யை, தேவையான நேரத்தில் பலனளிக்காது என்பது உலக நியதி என அவனுக்கு எடுத்து உரைத்தார். அவர் அளித்தது சாபம் அன்று அதுவே உலக நியதி ஆகும். 7 வருடங்கள் தன்னோடு இருந்தும் தன்னிடம் உண்மையை அவன் உரைக்கவில்லையே என்ற மனவேதனை அவருக்கு ஏற்பட்டது. அதன் பின் பரசுராமர் வேறு யாருக்கு சிக்ஷை அளித்ததாய் தெரியவில்லை.

இருப்பினும் கர்ணன் மீது கொண்ட பரிவால் அவன் எப்போதும் கீர்த்தியோடு இருப்பான் என வரமும் அளித்தார். இங்கே இன்னொரு சிறப்பு என்னவென்றால் பரசுராமர், கர்ணனுக்கு தேவேந்திரனுடைய விஜய தனுசையும் வரமளித்தார். அர்ஜுனன் வைத்திருந்த காண்டீபம் என்பது அக்னிதேவனுடைய வரப்பிரசாதம் ஆகும். கர்ணன் பெற்றிருந்த வில்லானது காண்டீபத்தை விட எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல.

துரோணர், பீஷ்மர் தவிர பரசுராமரிடம் பயிற்சி பெற்ற அதிருஷ்டவானும் கர்ணனே ஆவான். அர்ஜுனனுக்கு கூட அந்த வாய்ப்பு அமையவில்லை.

பரசுராமர் ப்ராஹ்மணர்களுக்கு மட்டுமே பயில்விப்பாரா?

முற்றிலும் தவறான செய்தி. கங்கை புத்திரர் பீஷ்மருக்கும் அவரே குரு ஆவர். அவருக்கு க்ஷத்தியர்கள் இழைத்த கொடுமையால் , முக்கியமாக ப்ராஹ்மணர்களுக்கு தற்காப்புக்காக பயில் வித்தார். க்ஷத்ரியர்கள் அவர் கைகளில் தான் ஷக்தி உள்ளதென நினைத்து மற்றவரை துன்புறுத்தி வந்தனர் என்பதை மறக்க வேண்டாம். க்ஷத்ரியர்களில் தர்மம் பரிபாலிப்பவர்களுக்கும் சொல்லி கொடுத்தார் என்பதை மறைத்து விட்டனர்.

கர்ணனுக்கு தனக்கு பயில் விக்க மாட்டாரோ என்ற பயம். அதனால் உண்மையை மறைத்தான். இதில் பொய் கூறியது யார் செய்த தவறு? அவன் உண்மையை கூறி வேண்டி இருக்கலாமே? கர்ணனுக்கு அந்த வித்யை கற்க ஆர்வம் தோன்றியது, மக்களுக்கு நல்லது செய்ய அல்ல. அர்ஜுனனுக்கு அவ்வித்யை தெரியும், தனக்கும் தெரிய வேண்டும் என்ற பொறாமையால். ஒரு சமயம் கிட்டினால் அவனை வதைக்க வேண்டும் என்ற க்ரோதத்தால்.

அர்ஜுனனை விட கர்ணன் 10 வயது மூத்தவன் என்பதையும் தெரிந்து கொள்வோம். கர்ணனுக்கு மாதா, பிதா, சஹோதரர்கள், செல்வ செழிப்பு, 100 கௌரவ நண்பர்கள் என குறைவில்லாத வாழ்வே இருந்தது. பாண்டவர்களும் அவனை வெறுக்க வில்லை (பீமனை தவிர்த்து - அவனுக்கு உணவே பிரதானம்). ஆனால் மறுபுறம் பாண்டவர்களுக்கு தகப்பன் இல்லை, நண்பர்கள் இல்லை, மன்னனின் கவனிப்பு இல்லை, 100 கௌரவர்கள் மற்றும் சகுனி செய்யும் சூழ்ச்சியிடம் இருந்து காப்பாற்ற யாரும் இல்லை. எந்தவகையில் அர்ஜுனன் கர்ணனோடு வசதி பெற்றான் என்பதை நாம் தான் சிந்திக்க வேண்டும். பாண்டுவே ஹஸ்தினாபுரத்து ராஜா. ஆனால் அவர் மகன்கள் ஒரு சுகத்தையும் அனுபவிக்க வில்லை.

கர்ணன் தன் மகன் என குந்தி அறிந்தது எப்போது?

ரங்கபூமியில் துரோணரின் எல்லா சீடர்களும் தாங்கள் பயின்ற வித்யையை மக்களுக்கு செய்து காட்டினர். அப்போது அங்கே கர்ணனை கவச குண்டலமுடன் கண்டவுடன் குந்தி அறிந்து கொண்டாள் கர்ணன் தன் மகன் தான் என்று. ஆனால் அப்போது கூறினால் நிலைமை என்ன ஆகுமோ ஏது ஆகுமோ என்று கூறாமல் விட்டாள். குந்தி துணிந்து முடிவு எடுக்காதது, அவள் கர்ணனை தன் பக்கம் இழுக்காமல் விட்டது எல்லாம் அவள் தவறே ஆகும். சமூகம் கர்ணனை நிராகரிக்கவில்லை என்பதை உணர்வோம்.

கர்ணனை அவமான படுத்தியது யார்? அவன் ஏன் துரியன் பக்கம் சென்றான்?

கர்ணன் தன் கலையை வெளிபடுத்த முற்பட்ட போது அவனை தடுத்தது பீஷ்மரோ, துரோணரோ, க்ருபரோ, விதுரரோ அல்ல. பீமன் கர்ணனை சூத புத்திரன் என்று பேசினான் என்பது உண்மையே. அது ஒரு இடம் தான் எவரும் அவனை திறமை வெளிப்படுத்த விடாமல் தடுத்தது.

இந்த சமயம் கர்ணனின் வில்வித்தை நமக்கு தேவை என்று உணர்ந்த துரியன் அவனை ஆசை காட்டி (அவன் அப்பாவிற்கு சொந்தமான அங்க தேசத்தின் மன்னன் ஆக்கி) தன் பக்கம் இழுத்தான். கடைசி வரை இருவரும் ஒன்றாக இருந்தனர் - இவனுக்கு அவன் அளிக்கும் அங்கீகாரம் தேவை, அவனுக்கு இவன் வில்வித்தை தேவை. தேவை எதிர்பார்த்து மட்டுமே உருவானது எப்படி தூய நட்பாகும்?

கர்ணன் தந்தை இழந்த பாண்டவர்களிடம் பரிவாக இருந்தானா?

சிறுவயது முதலே துரியனுக்கு பீமன் மேல் பொறாமை உண்டு. சகுனி வருவதற்கு முன்பே ஒரு முறை பீமனை கொல்ல முயன்றான் துரியன். அப்போது துரியனுக்கு உதவியன் யார் என்றால் அது கர்ணன். அவனுக்கும் பாண்டவர்களை கண்டு பொறாமை ஏற்பட்டது. அவனும் துரியனோடு சேர்ந்து பீமனுக்கு விஷம் கலந்த உணவை அளித்தான். இதை ஒரு இடத்திலும் காண்பிக்கவில்லை. ரங்கபூமிக்கு முன்னரே இருவரும் ஸ்நேகிதர்கள் ஆவர். சகுனி இருந்த பகையை வளர்த்தான்.

ஆனால் இப்போது வரும் மஹாபாரத தொடர்களில் கர்ணன் தவறே செய்யவில்லை, ஏழ்மை நிலையில், அனைவரும் வர்ணம் பார்த்து ஒதுக்கி, சொந்தங்கள் இல்லாதது போல் காண்பிக்கிறார்கள். ஆனால் உண்மையில் அப்படி வாடியது பண்டவர்களே.

தனக்கு அந்த எண்ணம் தோன்றாவிடினும், அவன் துரியன் செய்த அனைத்து தவறான செயல்களுக்கும் துணை நின்றான். நட்புக்காக அல்ல! துரியன் அளித்த அங்கீகாரம், பாண்டவர் மேல் கொண்ட தேவை இல்லாத பொறாமை.

அரக்கு மாளிகை சூழ்ச்சியை கர்ணன் எதிர்தானா?

நாம் காணும் படங்களில் கர்ணன் வீரம் ஒன்றையே விரும்பினான் என்று கூற பட்டது. ஆனால் சகுனியும் , துரியனும் பாண்டவர்களை அரக்கு மாளிகையில் வைத்து கொல்வது தெரிந்தும், அவன் அதை எதிர்க்கவில்லை. அர்ஜுனன் இல்லாவிடில் தானே உலகின் சிறந்த வில்லாளி என்பதே அவன் எண்ணம். அதர்மத்துக்கு துணை நிற்பது போல் மௌனமாய் இருந்தான்.

திரௌபதி கர்ணனை இழிவு படுத்தினாளா?

கர்ணனால் போட்டியில் வெல்ல முடியவில்லை என்பதே உண்மை. திரௌபதி கண்கொட்டாமல் எங்கே கர்ணன் வென்றுவிடுவானோ என்று பார்த்து கொண்டு இருக்க கர்ணன் மயிரிழையில் போட்டியில் தோல்வி உற்றான். ஆனால் எல்லா தொடர்களிலும் கூறுவது, அவனை விட்டால் போட்டியை வென்று விடுவான், என்பதால் கிருஷ்ணர் திரௌபதியிடம் கூறி, கர்ணனை அவமான படுத்தி போட்டியில் கலந்து கொள்ள விடாமல் தடுத்தாள் என்பது. அதனாலே அர்ஜுனன் வென்றான் என்று காண்பிக்கின்றனர்.

அது வெறும் வில் வித்தை அன்று. எப்படி சிவதனுசை ஸ்ரீராமன் மட்டுமே அசைக்க முடியுமோ அந்த போட்டியை அர்ஜுனன் மட்டுமே வெற்றி பெற இயலும். இது மட்டும் இன்றி அந்த சமயத்தில் அர்ஜுனன் மற்றும் கிருஷ்ணர் நெருங்கிய நண்பர்கள் கூட இல்லை.

கர்ணன் திரௌபதி துயில் உரிய படுவதை எதிர்தானா?

கர்ணன் அதை ஆமோதித்தான். ஐந்து கணவரை உடையவள் குல வது அல்ல, வேசி என்று நிறைந்த

சபையில் அவமான படுத்தினான். துரியனின் தம்பி விகர்ணன், திரௌபதி துயில் உரிய படுவதை எதிர்த்த போது, கர்ணன் அவனிடம், ஒரு வேசிக்கு வஸ்திரம் இருந்தால் என்ன? இல்லாவிடில் என்ன? என்று அவனை தடுத்தான். பீஷ்மரையும், துரோணரையும் சாடினான். க்ருபரை பாத்திரம் துலக்க தான் லாயக்கு என்றான். அவன் நினைத்திருந்தால் அன்று அந்த சம்பவம் தடுக்கபட்டு இருக்கும். நண்பனுக்கு நல்லது கூற தவறினான், தானும் நல்வழி பட தவறினான்.

கர்ணன் எப்போதுமே வென்றான் என்பது உண்மையா?

துருபதனிடம் தோற்றான். ஆனால் அந்த துருபதனை அர்ஜுனன் வென்றான்.

கந்தர்வர்கள் தாக்கிய போது துரியனை தவிக்க விட்டு சென்றான். அர்ஜுனன் அப்போது துரியனை காத்தான். இல்லாவிடில் அன்றே துரியன் இறந்திருப்பான்.

அஞ்ஞாத வாசத்தின் கடைசி நாள் அர்ஜுனனுடன் மோத வாய்ப்பு ஏற்பட்டது. அன்றும் அர்ஜுனனை வெல்ல வில்லை. அப்போது அர்ஜுனன் பீஷ்மர், துரோணர் கூடவும் ஒரே சமயத்தில் போர் புரிந்தான்.

குருஷேத்ர போர் போது கர்ணனின் சஹோதரர்கள் , மகன்கள் வதைக்க பட்டனர். ஆனால் அவர்களை அவனால் காக்க இயல வில்லை.

அபிமன்யு, சாத்யகி போன்றோர் கர்ணனின் வில்லினுடைய நானை அறுத்தனர்.

கடோதகஜனை கொன்ற கர்ணனை பீமசேனன் வெகுவாக தாக்கினான். அதனால் அவன் தப்பித்து செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டது.

அர்ஜுனன் மேற்கொண்ட பயிற்சியை நாம் யாரும் நினைவு கூறுவதே இல்லை. யுத்தம் இல்லாத காலத்திலும் அவன் தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். அரண்மனை சுகம் கண்டு இருக்கவில்லை. தொடர்ந்து பயிற்சி செய்தே வந்தான். கடும் தவம் புரிந்து ஈசனை மகிழ்வித்தான். கிருஷ்ணர் தேரோட்டும் அளவு தகுதி உடையவனாகி கொண்டான். ஆனால் அவனுக்கு இன்று அளவும் அதற்கான அங்கீகாரம் கிடைக்க வில்லை.

அரக்கு மாளிகையில் உயிர் போகும் நேரம், சூதில் தோற்றது, தண்ணீர் குடிக்க சென்ற இடத்தில் உயிரை விட்டது, காட்டில் வருந்தியது, அஞ்ஞாத வாசம் போது பணியாட்களாக இருந்தது என பாண்டவர்கள் அடைந்த துன்பம் ஏராளம். ஆனால் கடைசி வரை இருந்தது தர்ம பாதையில். அவர்கள் பாரத போரில் வெல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம்.

கர்ணன் தர்மத்தை மட்டுமே போரில் கடை பிடித்தானா?

அபிமன்யுவை 6 பேர் சூழ்ந்து வீழ்த்திய போது மௌனம் காத்தான்.

அபிமன்யு இறந்த அன்று மறுநாள் இரவு போர் புரிந்தான். இரவு போர் புரிய கூடாது என்பது நியதி.

கவச குண்டலம் தானம் அளித்தானே?

அது உத்தம செயலாகும். அவன் அதை தானம் அளித்தால் என்ன ஆகும் என தெரிந்தே செய்தான். அவன் கொடைக்கு நிகர் இல்லை.

ஆனால் அதற்காக இந்திரனிடம் உள்ள சக்தி அஸ்திரத்தை அவன் வேண்டினான். அதை அர்ஜுனனை கொல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு வாங்கினான்.கேட்டு பெற்றதால் அது தானம் இல்லை என்பது சிலரின் கூற்று. ஆனால் திரைப்பட கதை எதுவும் அதை காண்பிக்க வில்லை.

குந்தி கர்ணனிடம் அர்ஜுனனை தவிர மற்றவர்களை கொல்ல கூடாது என வரம் கேட்டாளா?

இல்லை. அதை தானே முன் வந்து அளித்தான். இதில் கிருஷ்ணனின் சூழ்ச்சி எதுவும் இல்லை.

குந்தி கர்ணனிடம் நாகாஸ்திரம் ஒருமுறை தான் பயன் படுத்த வேண்டும் என்று வரம் கேட்டாளா?

இல்லை. அது தக்ஷகன் என்னும் நாகராஜனின் மகன் அஸ்வசேனா. அர்ஜுனன் மீது கொண்ட முன் பகையால் கர்ணனுக்கு உதவி புரிவதாக கூறினான். அவனை ஒரு முறை தான் பயன் படுத்த இயலும். இதில் கிருஷ்ணனின் சூழ்ச்சி எதுவும் இல்லை. அவர் தேரை அழுத்தி அர்ஜுனனை காத்தார். தலைக்கு வந்தது தலை பாகையோடு சென்றது.

துரியனுக்கு அவன் நம்பிய அளவு உதவி புரிய முடிந்ததா?

துரியனை பற்றி யோசிக்காமல்

கவச குண்டலத்தை தானம் புரிந்தான்.

மற்ற நான்கு பாண்டவரை கொல்லமாட்டேன் என வரமளித்தான்.

குந்தியின் புதல்வன் என்ற உண்மையை மறைத்தான். முழு மனமுடம் போரிட இயலவில்லை.

அவன் சகோதரர்களை பீமனிடம் இருந்து காக்க தவறினான்.

எல்லோரிடமும் வாக்கு கொடுத்து எதையும் நிறைவேற்ற முடியாமல் மரணித்தான்.

தன் நண்பனை விடாமல் சென்றது அவன் நற்பண்பு ஆகும். அதை மறுப்பதற்கு இல்லை. அதே சமயம் அவன் வித்யையிலும் அவன் முழுமை பெறவில்லை என்பதையும் மறுக்க இயலாது.

கர்ணன் இறுதி போரில் சூழ்ச்சி செய்து கொல்லப்பட்டானா?

இறுதி போரில் கர்ணனும் அர்ஜுனனும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் இல்லை என்பதனை வெளி காட்டினார். இரண்டு பக்கமும் திவ்ய அஸ்திரங்கள் பறந்தன. கர்ணன் தான் இறக்க போவது உறுதி என தெரிந்தும் மனம்சலியாது தன் வீரத்தை வெளிப்படுத்தினான் என்பதை மறுக்க இயலாது.

இப்போது அவன் செய்த துஷ்கர்மம் ஒன்று சேர்ந்து அவனை தாக்க தயாரானது.

பசுவை கொன்ற பாவத்தால், ஒரு ப்ராஹ்மணர் இட்ட சாபத்தால் அவன் ரதம் சேரில் சிக்கியது. இதில் சூழ்ச்சி இல்லை. தெரியாமல் அவன் பசுவை வதைத்தான், அதற்கே அவன் தேர் சக்கரம் தரையில் புதைந்தது. நாம் தெரிந்தே வதைக்கிறோம். நம் நிலைமை என்ன ஆகுமோ?

அவன் ப்ரஹ்மஷிரா அஸ்திரத்தை ப்ரயோகிக்கும் மந்திரத்தை மறந்தான். தன் சுயநல எண்ணத்திற்காக உலகம் அழிய வல்ல அஸ்திரத்தை எய்ய நினைத்தான். பரசுராமர் கூறிய இயற்கை நியதியால் அவனால் அதை நினைவுகூற இயலவில்லை. இதில் சூழ்ச்சி இல்லை. ஒரு பொய் கூறியதால் அந்த வித்யை பலனில்லாது போனது. நாம் ஒவ்வொரு நாளும் பொய் கூறுகிறோம். சிந்தித்து பார்ப்போம்.

தக்ஷகன் மகன் அம்பு அர்ஜுனன் மேல் படவில்லை. சக்தி அஸ்திரம் கடோதகஜன் மீது எய்ய பட்டது இதில் கிருஷ்ணரின் திட்டமிடல் இருந்தது. சூழ்ச்சி என்று கூற இயலாது.

தேரோட்டி சல்யன் விட்டு ஓடினான். அவனுக்கும் கர்ணனுக்கும் இடையே கருத்துவேற்றுமை இருந்தது. துரியன் கிருஷ்ணனுக்கு ஈடான தேரோட்டி வேண்டும் என்று அவனை தேரோட்ட ஆணையிட்டான். சல்லியன் செய்தது தவறே ஆகும்.

தேர் சக்கரம் பூமியில் புதைந்த நிலையிலும் இருவரும் பலமாக தாக்கி கொண்டனர். கர்ணன் பூமியில் இறங்கி மனம் தளராது போரிட்டான். அர்ஜுனன் கர்ணனுடைய விரல்களை சேதப்படுத்தினான் . இருவரும் பெரும்களைப்பில் இருந்தனர் . இருந்தாலும் உக்கிரமான போர் நடந்தது. கர்ணனிடம் இருந்த திவ்யாஸ்திரங்கள் தீர ஆரம்பித்தன . அந்த வேலையில் அர்ஜுனன் அங்குலிக்க என்னும் திவ்யாஸ்திரம் கொண்டு தாக்கினான் . கர்ணன் சுதாரித்து எதிர் தாக்குதல் நடத்தும் முன் அது அவன் தலையை கொய்தது. அவன் தேர் சக்கரங்களை மீட்கும்போது, கையில் ஆயுதம் இல்லாத போது கொல்லப்பட்டான் என்பதும் தவறே ஆகும். தேரிலிருந்து இறங்கியபின் யுத்தம் தொடர்ந்ததை வேன்றுமென்றால் கண்ணனின் சூழ்ச்சி என கூறி கொள்ளலாம். அந்த மரணம் அவன் பிறப்பு, வளர்ப்பால் அவனுக்கு நிகழ வில்லை. அவன் அதர்மம் பக்கம் நின்றதால் ஏற்பட்ட நிலை ஆகும்.

பாண்டவர் பக்கம் இருந்த அபிமன்யு, உத்தரன், மத்ஸ்ய தேச அரசன் விராடன், உப பாண்டவர்கள், திருஷ்டத்யும்னன் போன்றோர் மாண்டதும் சூழ்ச்சியாலே. விதி வலியது என்பதை உணர்வோம். பிறந்த குலம் பொறுத்து அமைய வில்லை.

கர்ணனின் மரணம் போரை முடிப்பதற்கு இன்றி அமையாதது. அவன் பிறப்பின் காரணமே அது தான், இது தேவர்களுக்கு கூட தெரியாத விஷயம், கர்ணனால் க்ஷத்திரிய குலமே தூய்மை படுத்த படும் என்று பின் நாளில் நாரதர் யுதிஷ்டிரனுக்கு எடுத்து உரைக்கிறார்.

பீஷ்மர், துரோணர், கர்ணன் மூவரும் தங்கள் பணியை இயன்ற அளவு செய்தனர். ஆனால் அவர்கள் தாம் புரிவது எப்போது அதர்மம் என தெரிந்ததோ அப்போதே உயிரை துறக்க சித்தமாகினர்.

கர்ணன் தன்னுடைய அண்ணன் என தெரிந்த பாண்டவர்கள் என்ன செய்தனர்?

திரைப்படத்தில் காண்பிப்பது போல் குந்தியோ, தர்மதேவதையோ யுத்தக்களம் வந்து அழவில்லை. அதேபோல் கிருஷ்ணனும் கர்ணனிடம் போய் அவன் புண்ணியத்தை எல்லாம் தானம் பெறவில்லை. அவனை புகழ்ந்து அர்ஜுனனை சாடவில்லை. அதெலாம் கற்பனையே ஆகும்.

கிருஷ்ணன் கேட்ட கேள்விக்கு பதில் கூற முடியாமல் அமைதியாக நின்றான் கர்ணன். அர்ஜுனனின் அம்பு அவன் சிரத்தை உடலில் இருந்து பிரிக்க உடனே உயிர் விட்டான் என்பதே உண்மை.

யுத்தம் முழுமையும் முடிந்த பின்னர் கௌரவர்கள் மற்றும் கர்ணனின் சடலம் யுத்த பூமியில் இறுதி கடன் செய்ய மக்கள் இன்றி கிடந்தது. அப்போது பாண்டவர்கள் அந்த தேகங்களை சிதை மூட்டி இறுதி கடன் செய்தனர்.

அதன் பின்னரே குந்தி கர்ணன் தன்மகன் என்னும் உண்மையை கூறினாள். இதை கேட்ட பாண்டவர்கள் மிக மன வேதனைக்கு தள்ளப்பட்டனர்.

பெண்களுக்கு முன்னால் ரஹஸ்யம் மறைக்கும் திறன் நன்றாகவே இருந்தது. குந்தி கர்ணன் பற்றிய விஷயத்தை மறைத்ததால், உடன் பிறந்தவனை கொல்ல நேரிட்டது . அதனால் யுதிஷ்டிரன் சாபம் இட்டான் - "இனிமேல் பெண்களால் ரகசியத்தை காப்பற்ற முடியாது" என்று. விஷயம் வெளிப்படை தன்மை அற்று மறைக்கப்படும் இடத்தில் தருமமும் மறைக்கப்படுகிறது என்பது யுதிஷ்டிரனின் கூற்று.

கர்ணனின் ஒரு மகனே பிழைத்து இருந்தான். வ்ருஷகேது என்னும் அவனை அர்ஜுனன் தன் மகனாக கருதி தான் அறிந்த வித்யை அனைத்தையும் சொல்லி கொடுத்து இந்திரப்ரஸ்தத்தின் ராஜாவாக முடிசூட்டினான். கர்ணன் இருந்துதிருந்தால் மூத்தவன் என்ற முறையில் அவனுக்கு கிடைக்க வேண்டியது அவன் மகனுக்கு தானாகவே கிடைத்தது.

வ்ருஷகேது பாலகன், ஆதலால் திருடிருராஷ்டிரனின் மகனான யுயுட்சுவை அதற்கு பொறுப்பு அரசன் ஆக்கி பாண்டவர்கள் தங்கள் தர்மத்தை வெளிப்படுத்தினர். கர்ணனுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை அவன் மகனுக்கு செய்தனர்.

அதே போல் கர்ணனும் சூர்யலோகம் சென்று அவன் தந்தையோடும் , மகன்களோடும் ஆனந்த விண்ணுலக வாழ்வை தொடங்கினான். அர்ஜுனன் வளர்ப்பின் மீது கொண்ட முழு நம்பிக்கையால், தன் மகனை அவன் கவனிப்பில் விட்டு, வைஷாலி (கர்ணனின் மனைவி) தன் உயிரை தியாகம் செய்து சூர்ய லோகம் வந்தடைந்தாள்.

இது பற்றி ஒருவரும் பேசுவது இல்லை. அர்ஜுனன் மற்றும் யுதிஷ்டிரனின் மாண்பை நாம் உணர வேண்டும். இங்கே நாம் கவனிக்க வேண்டியது கர்ணன் பாண்டு புத்திரனும் அல்ல. ஹஸ்தினாபுரத்திற்கு ராஜா ஆன யுதிஷ்டிரன், நினைத்து இருந்தால் அர்ஜுனனை, இந்திரப்ரஸ்த ராஜாவாக முடி சூட்டி இருக்கலாம். ஆனால் பாண்டவர் அனைவரும் அந்த அதிகாரம் கர்ணனுக்கு சொந்தமென ஏகமனதாக முடிவெடுத்தனர். பாண்டவர்க்கு சொத்து, சுகம் மீது பற்று இல்லை, தர்மத்தின் மீதே இருந்தது. இல்லாவிடின் பரமாத்மா அவர்களுக்காக சாபம் பெற்றுருப்பானா? கர்ணனுக்கு பரிந்து பேசுவதாய் இங்கு பலர் அர்ஜுனனையும் யுதிஷ்டிரனையும் பரமாத்மவையும் இழிந்துரைக்கின்றனர். அதில் எந்த நியாயமும் இல்லை.

கர்ணன் கதாபாத்திரம் நமக்கு சொல்ல வரும் நீதி என்ன?

கர்ணன் மாவீரன் என்பதில் சந்தேகம் இல்லை , கொடைவள்ளல் என்பதில் ஐயம் இல்லை. ஆனால் அவன் கொல்லபட்டது அவன் அதர்மம் பக்கம் நின்றதால். துரோணர், பீஷ்மர், சல்லியன் எல்லோருக்கும் ஏற்பட்ட நிலை தான் அது. கர்ணன் தேரோட்டி மகன் என்பதால் அல்ல.

துரியனோடு சேர்ந்து, அவனை மகிழ்விக்க, திரௌபதியை அவமான படுத்தியது, பாண்டவர்களை கொல்ல நினைத்தது அதர்மமே ஆகும். அர்ஜுனன் மீது கொண்ட பொறாமை, அவனை தலை சிறந்தவன் அடைய வேண்டிய ஸ்தானத்தை தட்டி பறித்தது.

குந்தி அன்பு இல்லாவிடினும் ராதையின் அன்பு கிடைத்தது (குந்தியோடு இருந்துருந்தால் காட்டில் அலைந்திருக்க வேண்டும்). துரோணரின் பயிற்சி கிடைத்தது, யாருக்கும் கிடைக்காத பகவான் பரசுராமர் அருள் கிடைத்தது. அவன் வஞ்சிக்க பட்டன் என்பது தவறு. அங்கங்கே பீமன், சல்லியன், கிருபர் போன்றோர் அவனை திட்டியது உண்மையே. அப்படி பார்த்தால் கிருஷ்ணர் வாங்காத வசவு இல்லை.

மஹாபாரதம் பொறுத்த வரையில் யாரும் தலைவனோ கதாநாயகனோ இல்லை. மனிதர்கள் ஒவ்வொரு சூழ்நிலையில் எப்படி எந்த மார்க்கத்தை எடுக்கிறார்கள் என்பதை பொறுத்தே அவன் நல்லவனா கெட்டவனா என்பது தெரிகிறது. அதுவும் அந்த குறிப்பிட்ட நேரத்தில்.

கர்ணன் இரண்டிற்கும் நடுவில் ஊசலாடியவன் என்றே தோன்றுகிறது. விதி வசத்தால் அவனால் இரண்டுபுறமும் முழுமையாக செல்ல இயலவில்லை. நல்லதும் செய்தான், சமூக மீது கொண்ட வேண்டாத

வெறுப்பில் கெட்டதும் செய்தான். அர்ஜுனன் என்னும் ஒரு தனிப்பட்ட மனிதனோடு கொண்ட பொறாமை அவனை உலகம் தன்னை வஞ்சித்தது போன்று நினைத்தான். கர்ணனின் நல்ல குணங்களை எடுத்துக்கொள்வோம், தீய குணங்களை நிராகரிப்போம்.

குந்தி தனது தாய் என தெரிந்த வேளையில் எந்த பக்கமும் செல்ல இயலாமல் கட்டுண்டான். அவன் தர்மம் மட்டுமே செய்துருப்பின் எளிதாக பாண்டவர் பக்கம் சென்றுருக்கலாம்.

ஆனால் இப்போது உள்ள கூற்றின் படி அவன் சமூகத்தால் ஒதுக்க படவில்லை , தாழ்ச்சி குலம் என்று அவனை கல்வி கற்க அனுமதியாமல் இருக்க வில்லை , வர்ணாஸ்ரம தர்மம் அவனிடம் பாகுபாடு பார்க்கவில்லை , அவனுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்காமல் இல்லை என்பதை உணர்வோம்.

திரௌபதியை அவமான படுத்திய நிலையில் வெகுண்ட பீமன் - யுதிஷ்டிரனின் கையை எரிப்பேன் என்றான், கௌரவர்கள் அனைவரையும் தானே வதைப்பேன் என்றான். ஆனால் அந்த நிலையிலும் தன் குணம் மாறாத அர்ஜுனன் யார் மேலும் தனிப்பட்ட வெறுப்பை வெளிப்படுத்த வில்லை. கர்ணனை அழிப்பேன் என்று சபதம் உரைக்கவில்லை. இன்றளவும் அர்ஜுனனுக்கு கிடைக்க வேண்டிய சிறந்த வில்லாளி என்ற பெயரும்

யுதிஷ்டிரனுக்கு கிடைக்க வேண்டிய சிறந்த தர்மவான் என்ற பெயரும் கர்ணனுக்கே கிடைத்துள்ளது. ஆனால் உள்ளதை உள்ளபடி அறிவதே நமது கடமை.

நாம் அனைவரும் கர்ணனின் நிலையில் வாழ்க்கையில் ஒரு முறையேனும் இருந்துருப்போம். அதனால் தான் அவன் அதர்ம தரப்பில் நின்றாலும் கதாநாயகன் போல் முக்கியத்துவம் பெற்றுள்ளான். நம் எண்ணம் நிறைவேறாத போது, சமூகம் என்னை ஒதுக்கியது, இந்த உலகமே எனக்கு வஞ்சனை செய்தது என்ற எண்ணம் ஏற்படும். அப்போது யார் நம்மை அங்கீகரிக்கிறாரோ அவர் பக்கம் செல்கிறோம். அவரை மகிழ்விக்க அதர்ம காரியங்கள் புரிகிறோம். பின்பு தர்மம் பக்கம் வரமுடியால் செஞ்சோற்று கடனுக்கு அவன் கூடவே மடிகிறோம்.

கர்ணன் எல்லாம் கற்று, பெற்று இருந்தும் அவனுக்கு சுகம் இல்லை. அர்ஜுனனை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தை துரியன் வேரூன்ற வைத்தான். அதை போன்றே தான் அஸ்வத்தாமன் நிலைமையும். இவர்கள் இருவரும் தங்கள் கற்ற வித்யையை தீய வழக்கங்களையும் , தீய மன்னர்களையும் அழித்து தர்மம் தழைக்க பயன்படுத்தி இருந்தால் மஹாபாரத போரில் சர்வ நாசம் நிகழ்ந்து இருக்காது. கர்ணனின் புகழ் யுதிஷ்டிரன் புகழை மீறி இருந்துருக்கும்.

செஞ்சோற்று கடன் தீர்க்க அவன் உயிரை விட்டதை மதிக்கும் அதே நேரத்தில், நண்பன் விரும்புவதை மட்டுமே செய்யாமல் அவனுக்கு நன்மை தருவதை செய்திருந்தால் கர்ணன் நட்பிற்கு இலக்கணம் ஆகி இருப்பான். ஆனால் அவனும் அதர்மம் பக்கம் நின்றதால் மடிந்து, அவன் நண்பனும் மடிந்து, முழு வம்சமே இல்லாமல் போனது. யாருக்கும் பலன் இல்லை.

சந்தர்பங்களே ஒரு மனிதனை இயக்கும். கர்ணனை ஒரு மனிதனாக பாராமல் அவனை ஒரு பாடமாக பார்ப்போம். கர்ணனை குறைத்து கூறுவது நம் லட்சியம் அன்று. அதனால் ஒரு பலனும் இல்லை. தானத்தில் அவனை மிஞ்ச யாரும் இல்லை. ஆனால் ஒவ்வொருவரின் வெற்றி - தோல்வி , சுகமும் - துக்கமும் - இன்பமும் - ஏமாற்றமும் - ஏற்றமும் - இறக்கமும் - எழுச்சியும் - வீழ்ச்சியும் அவன் கர்மவினை பொறுத்தே அமைகிறது என்பதை மறுப்பதற்கு இல்லை.

சினிமா படங்கள், தொலைக்காட்சி நெடும் தொடர்களை மட்டுமே நம்பி இருப்பது தவறாகும். சிறந்த பதிப்பகம் மூலம் பிரசுரிக்கப்படும் புத்தகமே உண்மையான விஷயங்களை எடுத்து கூறும்.

கர்ணனின் வீரம், தானம், புகழ் ஓங்குக! சனாதன தர்மம் அனைவரையும் அவரவர் கர்ம பலனிற்கேற்ப வாழ வைக்கும்!!. சர்வே ஜன சுகினோ பவந்து!!!

Similar News