"ஏன்டா ஓட்டுக்கு காசு வாங்கிட்டு தெருவுக்கு லைட் வேற கேட்குறியா" என கேள்வி கேட்டவரை அடித்த தி.மு.க கவுன்சிலர்!
"ஏன்டா ஓட்டு போட காசும் வாங்கிகிட்டு தெருவுக்கு லைட்ட வேற போட சொல்றியா? நான் யாரு தெரியும்ல தி.மு.காரன்" என ரவுடி போல் மக்களை தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் மிரட்டிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலப்பாட்டகரிசல்குளம் பகுதியைச் சேர்ந்தவர் துரை கற்பகராஜ். இவர் தி.மு.க சார்பில் ஒன்றிய கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது ஊராட்சி ஒன்றிய துணைச் சேர்மனாக இருந்து வருகிறார்.
உள்ளாட்சித் தேர்தலில் மேலப்பாட்டகரிசல்குளம் பகுதியில் போட்டியிடும் போது அந்த பகுதிக்கு சாலை, குடிநீர், தெருவிளக்கு போன்ற அடிப்பைடை வசதிகள் ஏற்படுத்தித் தருவேன் என துரை மக்களுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளார். வெற்றி பெற்றபின் அப்பகுதிக்கு எந்த அடிப்படை வசதியும் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் ஊரக வளர்ச்சி துறைக்கும் மாவட்ட ஆட்சி தலைவருக்கும் அப்பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரக்கோரி கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில் துரை மற்ற பகுதிகளுக்கு வசதிகள் செய்து தராமல் தான் வசிக்கும் பகுதிக்கு மட்டும் உயர்மின் கோபுர விளக்குகள், சாலை வசதிகள் ஏற்படுத்திக் கொண்டதாக கூறப்படுகின்றது. அவர் வசிக்கும் பகுதிக்கு செய்ததைபோல் இதே போல மற்ற பகுதிகளுக்கும் சாலை, மின்விளக்கு வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என கேட்டுவந்த பொதுமக்களை துரை காசு வாங்கிக்கொண்டு ஓட்டு போட்டீங்க உங்கள் பகுதிக்கு நான் ஏன் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும்? என திமிறாக கூறி மேலப்பாட்டகரிசல்குளம் பகுதி மக்களை திருப்பி அனுப்பியுள்ளார்.