புதுவையில் ரங்கசாமி முதல்வராக பா.ஜ.க ஆதரவு - ஆளுநர் தமிழிசையிடம் கடிதம் அளிக்கப்பட்டது!

Update: 2021-05-04 02:30 GMT

புதுச்சேரியில் ரங்கசாமி முதல்வராக பா.ஜ.க ஆதரவு தெரிவித்தது. 30 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது.

30 தொகுதிகளில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சிகளான பா.ஜ.க 9 மற்றும் அ.தி.மு.க 5 இடங்களிலும் போட்டியிட்டன. இதில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிட்ட 16ல் 10 இடங்களிலும், 9 இடங்களில் போட்டியிட்ட பா.ஜ.க 6 இடங்களிலும் வெற்றி பெற்றன. அ.தி.மு.க போட்டியிட்ட 5 இடங்களிலும் தோல்வியை தழுவியது.

மொத்தமாக 16 இடங்களில் வெற்றி பெற்ற என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை பெற்றது. என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 10 பேரும் ரங்கசாமி முதல்வராக ஆதரவு தெரிவித்த நிலையில், பா.ஜ.க எம்.எல்.ஏக்களும் ரங்கசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதனைதொடர்ந்து பா.ஜ.க புதுச்சேரியில் ரங்கசாமியை முதல்வராக பதவி ஏற்பதற்கு தடையாக இருக்கிறது என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ரங்கசாமி முதல்வராக வேண்டி கடிதம் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கடிதத்தை பெற்ற அவர் ரங்கசாமி அவர்கள் முதல்வராக அந்த கட்சியினர் விரும்பும் நேரத்தில் பதவி பிரமாணம் செய்து வைக்கப்படும் என தெரிவித்தார்.

Similar News