பட்டாசு வெடித்ததை கேட்ட அ.தி.மு.க நிர்வாகியை அடித்து உதைத்த தி.மு.கவினர் - தினமும் தொடரும் விடியல்!
கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து நாளை காலை 9 மணியளவில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவி ஏற்கிறார். ஆனால் உடன்பிறப்புகள் வெற்றி செய்தியை கேட்ட நாள் முதலே ஆங்காங்கே தங்கள் அராஜகத்தை கட்டவிழ்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் சென்னை ஜெ.ஜெ நகரில் 'அம்மா உணவகத்தை' அடித்து நொறுக்கினர். பின்னர் தி.மு.க தலைமை கண்டித்து அவர்களை தற்காலிகமாக தி.மு.க'வில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளது.
இதனைதொடர்ந்து இனாம்குளத்தூர் அருகே உள்ள பெரிய ஆலம்பட்டி புதூரில் அ.தி.மு.க'வினரை தி.மு.க'வினர் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இனாம்குளத்தூர் அருகே உள்ள பெரிய ஆலம்பட்டி புதூரை சேர்ந்த பச்சமுத்து, அ.தி.மு.க கிளை செயலாளராக உள்ளார். இவரின் வீட்டருகே தி.மு.க நிர்வாகி சார்லஸ் என்பவர் தி.மு.க வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக தனது நண்பர்களுடன் பட்டாசு வெடித்துள்ளார்.
அருகில் கூரை வீடுகள் இருப்பதால் ஏன் இங்கு வெடிக்கிறீர்கள் என கேட்ட அ.தி.மு.க'வை சேர்ந்தவர்களை தி.மு.க'வினர் அடிக்க பாய்ந்துள்ளனர். உடனே இதுபற்றி போலிசாருக்கு தகவல் தெரிவித்தவுடன் தகவல் அறிந்த இனாம்குளத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சார்லஸின் நண்பரான இளையராஜா என்பவர், பச்சமுத்துவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு நண்பர்களுடன் சேர்ந்து அடித்து உதைத்துள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த பச்சமுத்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தப் புகார் குறித்து தி.மு.க நிர்வாகிகள் உள்பட 8 பேர் மீது இனாம்குளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.