"நீங்க எதிர்கட்சியாக இருக்கும் போது கூறிய மாதிரி கொரோனோ ஊரடங்கு காலத்தில் மின் கட்டண ரத்து வேண்டும்" - ஸ்டாலினுக்கு கோரிக்கை வைக்கும் அன்புமணி!
கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் வாழ்வாதாரம் பாதிப்பதால் இக்கால மின் கட்டணத்தை ரத்துச் செய்யவேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் பரவல் தமிழகத்தில் தீவிரமாகியுள்ளது. தினசரி பாதிப்பு 25 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. இதனையடுத்து தமிழகத்தில் மே 10 முதல் 24 வரை இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸும் வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாட்டில் நாளை மறுநாள் முதல் இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
இதைத்தான் பா.ம.க வலியுறுத்தியது. இது பயனுள்ள நடவடிக்கை. தமிழக அரசு அளித்துள்ள ஊரடங்குக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கொரோனாவிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள இதுதான் சிறந்த வழி. ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்!
முழு ஊரடங்கு காலத்தில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் அவர்களுக்கு நடப்பு சுழற்சிக்கான இரு மாத மின்சாரக் கட்டணத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். இது கடந்த காலத்தில் தி.மு.க'வும் வலியுறுத்திய கோரிக்கைதான். ஊரடங்கால் வாழ்வாதாரம் இழக்கும் முடி திருத்துவோர், வாடகை வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைத்துத் தொழில் பிரிவினருக்கும் சிறப்பு நிவாரணத் தொகையை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளார்.