சிக்கன் சேமியா கிடைக்காத ஆத்திரத்தில் கும்மாங்குத்து! பிரியாணி கடையை பிளந்து கட்டிய காங்கிரஸ் பிரமுகர்!
ஆம்பூரில் சிக்கன் சேமியா ஃபிரை கிடைக்காத ஆத்திரத்தில், காங்கிரஸ் பிரமுகரும் அவரது நண்பரும் சேர்ந்து உணவக உரிமையாளரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரயில் நிலையம் அருகே பிரியாணி கடை ஒன்று அமைந்துள்ளது. மதிய வேளையில், அதே பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் பிரபு மற்றும் அவரது நண்பர் தயாளன் ஆகியோர் சாப்பிட சென்றுள்ளனர்.
சிக்கன் சேமியா ஃபிரை மாலையில் தான் கிடைக்கும் என்பது தெரிந்தே, எங்களுக்கு இப்போதே வேண்டுமென அடம் பிடித்துள்ளனர். அது மாலையில் மட்டும் தான் கிடைக்கும் என உணவாக உரிமையாளர் முகமது சாலிக் கூறியுள்ளார். ஆனால், தங்களுக்கு இப்போதே வேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பிரியாணி கடை உரிமையாளர் எவ்வளவு சொல்லியும் கேட்காத அவர்கள், ஒரு கட்டத்தில் ஆத்திரடைந்து கடை உரிமையாளர் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அதனைக் கண்டு தடுக்க வந்த ஊழியர்களையும் தாக்கியுள்ளனர்.
கைகலப்பில் ஈடுபட்டது மட்டுமல்லாது, அங்கிருந்து வெளியேறுவதற்கு முன்னர், கடையை அடித்து நொறுக்கிவிட்டு சென்று அராஜகத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த கடை உரிமையாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
வழக்கமாக உணவகங்களில் புகுந்து தாக்குதல் நடத்துவதில் இன்னொரு கட்சியினர் பெயர் போனவர்கள் என்றிருந்த நிலையில், தற்போது களத்தில் காங்கிரஸ் கட்சியும் இடம்பெற்றுள்ளது.