"ஆட்சி கைக்கு வந்துடுச்சுன்னு ஆடாதீங்க" - தி.மு.கவை எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி!

Update: 2021-07-05 10:15 GMT

"தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் அதிகாரத்தை பயன்படுத்தி அடக்குமுறையை கையாள துவங்கிவிட்டனர்" என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையான எதிர்ப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆட்சிக்கு வந்தவுடன் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில், அதிமுக அரசைத் தரக்குறைவாக விமர்சித்ததற்காகப் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்துள்ளார்.

மாற்றாரை எந்த அளவுக்குத் தரம் தாழ்ந்து விமர்சித்தாலும், அது கருத்துச் சுதந்திரம். அதுவே தங்கள் ஆட்சியையும், தங்கள் கட்சியினரையும், சமூக வலைதளங்களில் நாகரிகமாக விமர்சித்தாலே, அதனை மாபெரும் குற்றமாகக் கருதி, தனக்குக் கீழ் உள்ள காவல் துறையினரை ஏவி வழக்குத் தொடுப்பது, கட்சியினரை விட்டு மிரட்டுவது போன்ற தி.மு.கவினருக்கே உரித்தான, அடிப்படையான செயல்களைப் பார்க்கும்போது, தி.மு.கவினர் இன்னும் மாறவில்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது.

தி.மு.க அரசு மற்றும் அமைச்சர்களாக உள்ளவர்களின் செயல்பாடுகளை நியாயமான முறையில் சமூக வலைதளங்களுக்கே உரிய கருத்துச் சுதந்திரத்தின்படி, மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் அ.தி.மு.க தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த நிர்வாகிகளை, காவல் துறையை வைத்து, இந்த அரசைத் தரக்குறைவாக விமர்சிப்பதாகக் கூறி வழக்குப் பதிவு செய்கிறார்கள். இவ்வாறு, செய்தி தொலைக்காட்சி உட்பட, அ.தி.மு.க தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த பலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், சுமார் 120 கட்சி உறுப்பினர்களிடம், சமூக வலைதளங்களில் பதிவிட்ட உங்கள் பதிவுகளை உடனடியாக நீக்க வேண்டும், இல்லையெனில் உங்கள் மீது வழக்குத் தொடுக்கப்படும் என்று மிரட்டி வருகிறார்கள். இதுபோன்ற செயல்களால் அதிமுகவையும், அதன் ஒன்றரைக் கோடித் தொண்டர்களையும் அடக்கி, ஒடுக்கி, ஒழித்துவிடலாம் என்று தி.மு.க ஆட்சியாளர்கள் கருதினால் அது பகல் கனவாகவே முடியும்.

"அஞ்சுவது யாதொன்றுமில்லை - அஞ்ச வருவதுமில்லை" என்று, எங்களைத் தீய சக்திகளிடம் இருந்து காத்து நின்ற எங்கள் தலைவியின் வைர வரிகளை நெஞ்சில் ஏந்தி நிற்கும் வீர மறவர்கள் நாங்கள். தி.மு.க'வினர், தங்களுக்குள்ள அத்தனை உரிமைகளும் மற்றவர்களுக்கும் உண்டு என்பதை வசதியாக மறந்துவிட்டு, தற்போது ஆட்சி அதிகாரம் கைக்கு வந்துவிட்டது என்று காவல் துறையின் மூலம் எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்டு, ஜெயலலிதாவால் கட்டிக் காக்கப்பட்டு, தற்போது கட்சித் தொண்டர்களால் எஃகுக் கோட்டையாகப் பாதுகாக்கப்படும் கட்சிக்கு எதிரான அடக்கு முறையை, உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Similar News