தி.மு.க ஆட்சி செய்வதால் பெண்கள் தங்கள் சுருக்குப்பையை பத்திரமாக வைத்துக்கொள்ளவும் - அண்ணாமலை !
"தி.மு.க ஆட்சி செய்வதால், பெண்கள் அனைவரும் தங்களது சுருக்குப்பையை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். தி.மு.க'வுக்குத் தயவு செய்து ஓட்டுப் போடாதீர்கள்'' என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தில் கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஒன்றியத்திலிருக்கும் அழிஞ்சிக்குப்பம் கிராமத்தில், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்தார். பிரசாரத்தில் பேசிய அண்ணாமலை, "தி.மு.க ஆட்சிக்கு வந்து ஐந்து மாதங்களே ஆகின்றன. மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்திருக்கிறாகள். கல்விக்கடன், நகைக்கடன் ரத்து செய்யப்படும் என்றார்கள். கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றையும் நிறைவேற்றவில்லை. தி.மு.க ஆட்சி செய்வதால், பெண்கள் அனைவரும் தங்களது சுருக்குப்பையை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்" என தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்த அவர், "குழந்தை பெற்றெடுப்பது பாரதிய ஜனதா கட்சி. அதற்குப் போட்டி போட்டு பெயர் வைப்பது திராவிட முன்னேற்றக் கழகம். தி.மு.க'வுக்குத் தயவுசெய்து ஓட்டுப் போடாதீர்கள். பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி'க்குள் கொண்டு வந்து 35 ரூபாயாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு மாநில அரசுகளின் ஒப்புதல் தேவை" என கூறி வாக்குகள் சேகரித்தார்.