தருமபுரி மாவட்ட பா.ஜ.க தலைவர் அனந்த கிருஷ்ணனின் உடலை சுமந்து சென்ற அண்ணாமலை!
தருமபுரி மாவட்ட பாஜக தலைவர் எல்.அனந்த கிருஷ்ணன் நேற்று (ஜனவரி 20) மாலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் தருமபுரி நகரில் உள்ள பிடமனேரியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தருமபுரிக்கு இன்று வருகை புரிந்து, அனந்த கிருஷ்ணன் பூத உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் அவரது உடல் தருமபுரி மாவட்ட தலைமை மருத்துவமனை முன்பு உள்ள மின்மயானத்தில் எரியூட்ட எடுத்து சென்றனர்.
அப்போது உயிரிழந்த அனந்த கிருஷ்ணனின் பூத உடலை, அண்ணாமலை தோளில் சுமந்து மின்மயானத்திற்கு எடுத்து சென்றார். அவரது செயல் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.